அம்பாப் பாட்டு

பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியம்

‘‘நாதனார் அருளாலே
நான் பாடவே துணிந்தேன்
கர்த்தனார் அருளாலே
கவிபாடவே துணிந்தேன்’’

நாட்டார் பாடல்களை வகைப்படுத்தும் (classification) போது அதில் ஒரு முக்கியப் பிரிவாக உழைப்பு அல்லது தொழிற்பாடல்கள் அமையும்.

கடுமையான உழைப்பின்போது வேலைத்திறனை அதிகரிக்கவும், வேலையினை முறைப்படுத்தவும், நீண்ட வேலை நேரத்தில் ஏற்படும் மனச்சோர்வை நீக்கவும் பாடப்படும் பாடலே உழைப்புப் பாடலாகும்.தோணித் தொழிலாளர்களின் நாட்டார் பாடல்கள் உழைப்புப் பாடல் பிரிவிலேயே அமையும். இப்பாடல்கள் அம்பா அல்லது அம்பாப் பாட்டு என்று குறிப்பிடப்படும். இதைப் பாடுவதை ‘‘அம்பா போடணும்’’ என்று குறிப்பிடுவர்.

அம்பாப் பாடலானது ஒற்றை அம்பா, இரட்டை அம்பா என இருவகைப்படும். வேலையின் தன்மை, கால அளவு ஆகியனவற்றிற்கேற்ப இவை பாடப்படும். கடலோடிகளின் பாடலை இது போன்று இரண்டாகப் பகுப்பது மரபாகவுள்ளது.

கடலோடிகளின் பாடலைக் (chants) குறைந்த இழுப்புப் பாடல் (short haul chants) நீண்ட இழுப்புப் பாடல் (Long haul chants) என்று ஹோரஸ் –பி-பெக் என்ற அமெரிக்க நாட்டார் வழக்காற்றியலறிஞர் பகுக்கிறார். ‘‘இவ்விருவகைப் பாடல்களும் அவர்கள் வேலை செய்ய உதவும் ஒத்திசைவுடன் (Rhythem) கூடிய ஒரு பல்லவியைச் (Refrain) சார்ந்திருக்கும்.’’

நீண்ட இழுப்புடன் கூடிய கடலோடிகளின் பாடல்கள் நங்கூரத்தை இழுத்து நிறுத்தல், உச்சிபாய் மரத்தை நிறுத்தல், தண்ணீர் பம்புகளை அடித்தியக்குதல் போன்ற நெடிய பணிகளைச் செய்யும் போது பயன்படுத்தப்படும்.

குறைந்த இழுப்புடன் கூடிய பாடல் விரைந்த உணர்ச்சியுடன் கூடியது. முக்கியமாக பாய்மர குறுக்குக் கட்டைகளை இழுத்துக் கட்டுதல் பாயை மேலே ஏற்றல் போன்ற பணிகளிலோ கூட்டு முயற்சி தேவைப்படும் பணிகளிலோ பாடப்படும்.

பெயர்க் காரணம்

இலங்கையைச் சேர்ந்த புஷ்பராஜன் (1976 : 3)

‘‘அம்பா என்பது அழகிய பாடல் (அம் = அழகு, பா = பாடல்) என்று பொருள் பெறும். அல்லது அம்பி என்பது தோணியின் மறுபெயராகும். இவ் அம்பி சம்பந்தமாக இப்பாடல்கள் எழுந்தமையினால் ‘அம்பிப்பாடல்’ என்றொரு சொல் உருவாக்கப்பட்டு இச்சொல்லே காலம் செல்லச் செல்ல சிதைந்து, அம்பாகவும் மாறியிருக்கலாம்.’’

என்று அம்பாப் பாடலின் பெயர் குறித்துச் சொற்பிறப்பியல் விளக்கம் தந்துள்ளார். இவ்விளக்கம் பண்டைய இலக்கியங்களைச் சான்றாகக் கொண்டு எழுந்துள்ளது.

‘அம்பாயம்’ என்ற தமிழ்ச்சொல், பொதுவாக வலியையோ உழைப்பினால் ஏற்படும் உடல் வலியையோ குறிக்கும். அம்பாப் பாடல் ஒன்றில் விரல் மொழிகளில் ஏற்படும் வலியை ‘மோதிரங்கள் போட்டதொரு மொழிகளெல்லாம் நோகுதம்மா’ என்று பாடுவதும். தொடை இடுக்கில் ஏற்படும் தசை வலியை ‘நோகுதடா மைமா சந்துக்குள்ளே’ (சந்து – தொடையிடுக்கு) என்று பாடுவதும் இடம்பிடித்துள்ளன. எனவே கடினமான உடல் உழைப்பின்போது பாடிய உழைப்புப்பாடல் ‘அம்பாயப் பாடல்’ என்று அழைக்கப்பட்டு பின்னர் அம்பாப் பாடலாக மாறியிருக்கலாம். சான்றாக, புயலில் அகப்பட்டு மீண்டு கரையேறிய பரதவர்கள் தாம் பட்ட சிரமங்களை ‘அம்பாயப் பட்டுப் போனோம்’ என்று கூறுவர். இது இன்றும் வழக்கிலுள்ளது.

‘அம்பாப் பாடல்’ என்று ஏன் பெயர் வந்தது என்று காரணம் சொல்வது கடினம். ஆனால் கடல் தெய்வம் கடலன்னை என்று அழைக்கப் பட்டதாலும், பின்னர் அத்தெய்வமே கன்னிமா என்று அழைக்கப்பட்டதாலும் இப்பாடல்கள் அம்பாள் பாடல்கள் என்று இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அம்பாள் என்னும் பெயர் பொதுவாகப் பெண் தெய்வத்தைக் குறிக்கும்’, என்று வானமாமலை 1977 : 513 குறிப்பிடுகிறார்.

அம்பா என்ற சொல்லுக்குச் சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகன் ‘Mother’ : தாய். Parvathi as Mother of the Universe : பார்வதி என்று பொருள் தருகிறது. சங்க இலக்கியங்களும் ஒன்றான ‘பரிபாடல்’ தைமாதம் கன்னியர் மேற்கொள்ளும் ‘அம்பா ஆடல்’ என்ற சடங்கினைக் குறிப்பிடுகிறது. பரிபாடல் உரையாசிரியர் அம்பா என்பது தாயையும் அம்பா ஆடல் என்பது தாயுடன் நிகழ்ந்தும் நீராடலையும் குறிப்பதாக எழுதியுள்ளார். சென்னைப் பல்கலைகழக லெக்சிகன் ஆம்பாவாடல் என்பதற்கு,

‘Ceremonial ablutions of young girls in the month of
Tai matham under the guidance of their mothers.’

என்று விளக்கமளிக்கிறது. இவ்விளக்கத்தின் அடிப்படையில் அம்பா என்ற சொல், தாய்த் தெய்வத்தைக் குறிக்கிறது என்பதை அறியமுடிகிறது. இதுவரை பார்த்த விளக்கங்களின் அடிப்படையில் பரதவர்கள் தம் தாயாகக் கடலை கருதுவதால் அவர்களின் தொழில்பாடல் அம்பாப் பாடல் எனப் பெயர் பெற்றது என்று கூறலாம்.
============================
நன்றி: “தோணி”

2 thoughts on “அம்பாப் பாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *