கணக்குப் பிள்ளைகள்

பேராசிரியர் ஜோசப் இருதய சேவியர்
தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரி, பாளையங்கோட்டை

ஸ்தல கணக்குப் பிள்ளைகள்

முத்துக்குளித்துறையில் பணியாற்றும்போது தமிழ்மொழியைப் புரிந்து கொள்ள இயலாத புனித சேவியர் “கணக்குப்பிள்ளைகளை” உருவாக்கியிருந்தார். 1543 டிசம்பர் 31-ஆம் நாள் எழுதிய மடலில் அவர் குறிப்பிடுவது :- “ஒவ்வொரு திருநாட்காலங்களிலும் நான் அவர்களை (மக்களை) ஒரு இடத்தில் கூட்டி மொத்தமாக விசுவாச அறிக்கையைப் பாட கூறியிருக்கிறேன்.
அக்கூட்டங்களைத் தலைமை தாங்க ஒவ்வொரு கிறிஸ்தவக் கிராமத்திலும் அறிவுக்கூர்மையும், குணநலனும் கொண்ட மனிதர்களை நியமித்திருக்கிறேன். இத்தகைய கணக்குப்பிள்ளைகளுக்கு எனது வேண்டுகோளின்படி ஆளுநர் டாண்டார்டின் அல்போன்சா ஆண்டு வருமானத்தில் 4,000 தங்க பணங்களை ஒதுக்கியிருக்கின்றார்”.
“புனித சேவியர் நல்ல ஒழுக்கமும், சிறந்த கல்வியறிவும் கொண்ட சிலரை ஒன்று திரட்டி தான் அவர்களுக்குப் போதித்தவைகளையெல்லாம் எழுத்துப் பூர்வமாக வழங்கி அவர்களது இனத்திற்கு அவர்களையே ஆசிரியர்களாக ஆக்கினார். மக்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் எழுப்பப்பட்டுள்ள ஆலயங்கள் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. அவ்வாலயங்களைக் கவனிக்கவும், அவர்கள் பொருளாதாரம் அனுமதிக்கும் அளவு அவற்றை அலங்கரிக்கவும் அவர்களுக்குக் கடமை உண்டு”.
சேவியரைத் தொடர்ந்து முத்துக்குளித்துறையின் ‌மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்ட ஆண்டனி கிரிமினாலியும், அவருக்குப் பின் ஹென்றிக்ஸ் அடிகளாரும் தொடர்ந்து கணக்குப்பிள்ளைகளை உருவாக்கித் திருச்சபை வளர்த்தனர். இன்று வரை பரதவ கிறித்தவத்தில் கணக்குப்பிள்ளைகள் இடம் இன்றியமையாததாக உள்ளது.
ஒவ்வொரு கத்தோலிக்கக்குழுவும் இக்கணக்குப்பிள்ளைகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவதும். குழந்தைகளுக்கு ஞானக்கல்வி அளிப்பதும் நோயாளிகளுக்கும், இறந்தவர்களுக்கும் உதவி செய்வதும், மறை குருக்களுடன் சந்திப்பிற்கு ஏற்பாடுகள் செய்வதும். விழாக் காலங்களையும் நோன்பு நாட்களையும் அறிவிக்க வேண்டியதும் அவர்கள் கடமையாகும்.
நடமாடும் கணக்குப் பிள்ளைகள்
ஸ்தல கணக்குப் பிள்ளைகள் துணையாகச் சென்ற கணக்குப்பிள்ளைகளும் இருந்தனர். அத்தகைய கணக்குப்பிள்ளைகள் குருக்களுக்கு முன்னரே சென்று திருநீராட்டுப் பெற இருப்போரின் சரியான பட்டியலைத் தயார் செய்யவும் வரப்பிரசாதங்களைப் பெற வேண்டியவர்களை அடையாளம் காணவும் எவரெவர் சச்சரவிட்டுக் கொண்டிருக்கின்றனர், எவரெவர் சிறந்த வாழ்க்கை வாழவில்லை என்பனவற்றை அறிந்திடவும் கடமைகள் உண்டு. அவ்வாறே நாட்டில் பொதுவான சூழ்நிலைகளையும் அவர்கள் அறிக்கைகளாகத் தயாரித்தனர்”.இவர்கள் ‘நடமாடும் கணக்குப் பிள்ளைகள்.’ என்றழைக்கப்பட்டனர்.
சாகுந்தறுவாயில் இருக்கும் குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் திருநீராட்டவும் கிறித்தவக் கோட்பாடுகளைத் தினமும் போதிக்கவும் இவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.பொதுவாக இக்கணக்குப்பிள்ளைகள் வெகுமதிகளிலும் அறக்கொடைகளிலும் வாழ்ந்தனர் என்றாலும் சில நேரங்களில் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. போர்ச்சுகீசிய ஆளுநர்கள் இக்கணக்கு பிள்ளைகளுக்கும் மொழி பெயர்ப்பாளர்களுக்கும் வழங்குவதற்கென்றே புனித சேவியரிடம் நாலாயிரம் பணங்கள் கொடுத்தனர்.
மறைபரப்பு பணிகளில் கணக்குபிள்ளைகள்
இக்கணக்கு பிள்ளைகள் மறைபரப்பாளர்களுக்கு பெரும் உதவிகளை செய்தனர். ஹென்ரி ஹென்ரிக்கஸ் அடிகளார் 1552 ஜனவரி 27ம் நாள் எழுதிய மடலில் கணக்குப்பிள்ளைகள் தங்களது ஸ்தலங்களில் விடா முயற்சியாக உழைக்கின்றனர் என்றும் ஆனால் போர்ச்சுகீசியர்கள் வெளியேறிய பின்னரும் கத்தோலிக்க சபை இந்தியாவில் நிலைத்து நிற்குமாறு பலமடைந்து விட்டதாகவும் குறிப்பிடுகிறார். வரலாறும் அந்த கணிப்பை உறுதிப்படுத்துகிறது.
1643யில் பல்தசார் கோஸ்தா யேசுசபை பாதிரியார் மலபார் மறைமாவட்ட அதிபருக்கு எழுதிய மடலில் மறை மாவட்டங்கள் எங்களுக்கு மறைக்குருக்கள் போதவில்லை. எனினும் அப்பாற்றாக்குறையை நற்செய்தி பரப்ப தயாராக உள்ள கத்தோலிக்கர்களை கொண்டு ஓரளவிற்கு சரி செய்கின்றோம். நாங்கள் இல்லாத நேரங்களில் காரியங்களை ஆற்றவும், சமய பணிகளில் ஈடுபடவும் அவர்களை நியமித்திருக்கிறோம். அவர்களும் இப்பெரும் தூய பணிக்கு முழுமையாகத் தங்களை அர்ப்பணித்திருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *