தென் தமிழக நெய்தல் படைப்பாளிகள்

ஜஸ்டின் திவாகர்

தமிழகத்திற்கு அச்சுத்துறையை முதலில் அறிமுகப்படுத்தியது கிறிஸ்தவம்தான். தமிழ் மொழியில் முதன் முறையாக 1577 ஆம் ஆண்டு ‘கிரிசித்தியானி (கிறிஸ்தவ) வேதோபதேசம்’ என்ற நூலும் 1579 ஆம் ஆண்டு ‘கிறிஸ்துவ வணக்கம்’ என்னும் உரைநடை நூலும் ஹென்ரிக்கஸ் என்ற யேசு சபைப் பாதிரியாரால் அச்சிடப்பட்டதாகவும், சுயமாக அச்செழுத்துக்களை இஞ்ஞாசி ஆச்சாமணி என்பவர் உருவாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழகக் கடற்கரையில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் (அப்போதைய நெல்லைச்சீமை) புன்னைக்காயல் என்ற மீனவக் கிராமத்தில் 16ஆம் நூற்றாண்டில் அச்சுப்பொறி இயந்திரத்தை நிறுவினர். இதற்கு அங்கு வாழ்ந்த மீனவர்களின் பொருட்பங்களிப்பு முக்கிய காரணமாக அமைந்தது. அவ்வாறு அச்சிட்டவைகளில் பல புத்தகப் பிரதிகளை மீனவர்களின் பங்கேற்பிற்கு பிரதிபலனாகக் கொடுத்ததாகவும் குறிப்புகள் கூறுகின்றன.

அச்சுத்தொழிலை முதலில் கண்ட கடலோரம், இன்று கல்வியிலும் பொது அறிவிலும் கவலைக்கிடமாகக் காணப்படுகிறது. கல்வியின் முக்கியத்துவத்தை மறந்து போனது. விழிப்புணர்வையும் கடலோரம் இழந்து போயிருக்கிறது. கடற்கரையின் நிலத்தில் சலவைக்கல் தரையிட்டு வீடு கட்டியவர்களின் இல்லத்திற்கு தினசரிகளோ, மாதவெளியீடுகளோ வரவில்லை என்பதுதான் எதார்த்த நிலை, புத்தகங்கள் இவர்களின் பயன்பாட்டுத் தூரத்திற்கு அப்பால் உள்ளது.

இது ஒரு புறமிருக்க, அலைவாய்க்கரையில் பிறந்த பல கல்வியாளர்கள் தமது சமூக அக்கறையின் நிமித்தம் பல இலக்கியங்களையும் ஜனரஞ்சக நூல்களையும் ஆய்வுகளையும் படைத்து வருகின்றனர்.

கடற்கரைப் படைப்பாளிகளின் படைப்புகள் வெகுமக்களைப் பரவலாகச் சென்றடையவில்லை என்பது வேதனைக்குரியது. ஐம்பது புத்தகங்களுக்கு மேல் படைத்த உவரி வலம்புரி ஜான் வெறும் அரசியல்வாதி என்றுதான் மீனவசமூகம் நினைவு வைத்திருக்கிறது. சுதந்திரப் பிரகடனங்கள், வரலாற்றுக் கவிஞர், ஒரு ஊரின் கதை, நீர்க் காகங்கள், அம்மா அழைப்பு, சாதனை சரித்திரம் சவேரியார், தெற்கு என்பது திசையல்ல, ஒரு நதி குளிக்கப் போகிறது, அந்தக இரவில் சந்தன மின்னல், சொர்க்கத்தில் ஒருநாள், இரண்டாவது மகாத்மா, காலத்தை வென்ற காதலர்கள், இரண்டாவது அலைவரிசை, சீனம் சிவப்பானது ஏன்? இஸ்லாம் இந்த மண்ணுக்கேற்ற மார்க்கம், கேரள நிசப்தம் போன்ற தமிழ்ப் படைப்புகளும், Comfort in the dawn, Miracles of Jesus போன்ற ஆங்கிலப் படைப்புகளும் சில குறுகிய வட்டத்தினரின் அலமாரியை மட்டும்தான் அலங்கரிக்கின்றன. வலம்புரிஜான் மீனவசமூகம் உலகுக்கு அளித்த அரிய அறிவுஜீவி என்பதை அம்மக்களே உணர்ந்து கொள்ளவில்லை, அவரை ஏற்றுக் கொள்ளவுமில்லை, நிகழ்காலப் படைப்பாளியான வறீதையா கான்ஸ்தந்தினின் மீனவ மீட்டுருவாக்கச் சிந்தனைகள் போதிய அளவுக்கு விவாதிக்கப்படவில்லை, பரவலாக்கப்படவுமில்லை. மும்பையிலிருந்து பரவர் குரலாக கடந்த பத்து வருடங்களாக ஒலித்துவரும் சமூகச் சிந்தனையாளர் ராஜா வாய்ஸ் குரல் சமூகத்துக்கு எட்டாமலே இருக்கிறது.

கடலோர கிராமங்களில் வாழ்பவர்களில் கல்வியாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. சமகால நிகழ்வுகளையும் அதன் தாக்கங்களையும் விவாதத்துக்கு உள்ளாக்கும் தளங்கள் இல்லாமல் போய்விட்டன. கடல் வளத்தையும் கடல்சார் வாழ்க்கையையும் தக்கவைத்துக் கொள்ளும் சிந்தனை தேய்ந்து போனது. பளிங்கு பங்களாவும் கோடி ரூபாய் கோயிலும் கட்டியவர்கள் தாங்கள் படிப்பதற்கு புத்தகங்களும், பத்திரிக்கைகளும் வாங்காதது கவனிக்க வேண்டிய சிக்கல் ஆகும்.

கடலோரக் கத்தோலிக்க சமூகத்தின் எழுத்துகள் மதத்தைக் கடந்து போகாதது, மாற்று வாசிப்புக்குப் பரிச்சயப்படாதது வளர்ச்சித் தடை ஆகும். கடிதம் எழுதுவதிலும் வைபவங்களில் வாழ்த்திப் பேசுவதிலும் கூட மீனவர்கள் மதத்தின் மொழியைத்தான் அதிகம் பிரயோகப்படுத்துகின்றனர்.

நெய்தல் படைப்பாளிகள் முன்னிலைப்படுத்துவது, கடல் சார்ந்த சமூகத்தின் அலைகள் போன்ற ஏற்றத் தாழ்வுகளை; கடலின் மொழி அலைகள்தான். கடலோர மீனவ மக்கள் தங்கள் சமூக மொழியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் நெய்தல் பரப்பில் ஒரு படைப்பு இயக்கம் மெதுவாக வேர்கொள்ளத் தொடங்கியுள்ளது. தலித் சமூகத்தில் நிகழ்ந்ததுபோல படைப்பும் வாசிப்பும் நெய்தல் நிலத்தில் சமகாலத்தில் நிகழ்ந்தாக வேண்டும். சமய நம்பிக்கைகளைக் கடந்து இது விரைவாக நிகழ்வதில்தான் இந்தச் சமூகத்தின் மறுமலர்ச்சி அடங்கியுள்ளது.

நெய்தல் படைப்பாளிகளின் பட்டியல்

வலம்புரி ஜான் (உவரி) – 50 நூல்கள்

ஜோ டி குருஸ் (உவரி)

  • புலம்பல்கள் (2004)
  • ஆழிசூழ் உலகு (2005)
  • கொற்கை (2009)

வறீதையா கான்ஸ்தந்தின்(பள்ளம் துறை)

  • குமரி கடற்கரை நீர்வளங்கள் (2000)
  • Water Resources of Southwest coast (2000)
  • டிசம்பர் வடுக்கள் (2005)
  • நெய்தல் சுவடுகள் (2005)
  • பேரலைக்கு அப்பால் (2006)
  • ஆழிப்பேரிடருக்குப் பின் (2006)
  • அணியம் (2008)
  • The Catastrophe and After (2008)
  • என்னைத் தீண்டிய கடல் (2009)
  • மீன்வள மசோதா (2010)

ஆ.தாமஸ் (புத்தன்துறை)

  • சோழக்காற்று (2005)
  • இராபூனி (2007)
  • புலம் பெயர்ந்தவர்களின் கதை (2008)
  • ஆழித்தேரேறி (2010)

சி.பெர்லின்(குறும்பனை)

  • கடலுக்குள்ளே கடலுக்குள்ளே(2007)
  • கடலின் கருவறையில் (2008)
  • நீந்திக் களித்த கடல் (2009)

அரிமா வளவன் (உவரி)

  • விடியும் வரை போராட்டம் (2006)
  • நில், திரும்பு, புறப்படு (2008)
  • யாருக்கு இந்த ஆயுதம் (2008)

தொ. சூசைமிக்கேல் (பள்ளம்துறை)

  • பட்டுமணல் மொட்டுக்கள் (2003)
  • எண்ணச்சிலம்பின் பரல்கள் இன்னும் சில (2010)

மரியஜான் காலிங்கராயர் (கோவளம்)

  • செண்பகராமன் பள்ளு (1983)

ம.சேவியர் (உவரி)

  • பாடத்தெரியாத பன்னீர்ப் பூக்கள் (1983)
  • வைகறை ராகங்கள் (1985)
  • தாய்மனம் (2009)
  • மெளனத்தின் சன்னதியில் (2009)

ஜோ.இவாரியஸ் பர்னாண்டோ (இடிந்தகரை)

  • நீலக்கடலும் நீண்ட கனவும் (2008)

ஜெயசீலன் கர்வாலோ (வேம்பார்)

  • ஏதேன் பூங்கா (2003)

ஜோ.தமிழ்ச்செல்வன் (மண்டைக்காடு புதூர்)

  • நீதிமன்றக் கூண்டில் திருக்குடும்பம் (2005)
  • அமெரிக்க அடிமைகளின் அணுவிபத்து மசோதா (2010)

பீட்டர்ராயன் (இடிந்தகரை)

  • இந்தியாவின் முதல் விடுதலை முழக்கம் மாவீரன் மருதநாயகம் (2008)

எஸ். எ.ஆர். பரதராஜ்(கன்னியாகுமரி)

  • அர்ப்பணம் (2004)

பா.மரியதாசன் (ஏர்வாடி)

  • புதுக்குறள் (1999)

இதயநேசன்(மூக்கையூர்)

  • ஒரு இரவு விடிய மறுக்கிறது (1989)
  • நிச்சயம் சூரியன் கிழக்கிலில்லை (1990)

அ.அருள்தாசன் (பள்ளம்)

  • அஞ்சலி (2007)

அருள் எழிலன்(புத்தன் துறை)

  • கச்சத்தீவு (2010)

நேவிஸ் விக்டோரியா(வேம்பார்)

  • முத்துக்குளித்துறை பரவர்கள் (2007)

ஜெபமாலை ஆராச்சி(கன்னியாகுமரி)

  • Myths and Realities (2010)

ஜஸ்டின் திவாகர்(பொழிக்கரை)

  • வலைகளில் சிக்கியவன் (2007)
  • கோட்டாறு மாமுனிவிழா (2008)
  • பொழிக்கரை – இனமும் சமுதாயமும் (2009)

ஜெரால்டு ராயன்(வீரபாண்டியப் பட்டணம்)

  • வெகுசனக் கத்தோலிக்கம் (2009)

அலங்காரப் பரதர்(தூத்துக்குடி)

  • கடலும் கடற்கரையும் சிவக்கும் (2007)
  • சிவப்பு மண்ணானது மீனவர் வாழ்க்கை (2004)

சிறில் அலெக்ஸ்(முட்டம்)

  • முட்டம் – அலைகள் பாறைகள் மணல்மேடுகள்(2008)

கபிரியேல் மெல்கியாஸ்(பள்ளம்)

  • Biodiversity & Conservation (2005)

எஸ். டெக்லா (கூட்டப்புளி)

  • The Portuguese on the pearl Fishery Coast (2009)

************
குறுந்தகடுகள்
************
ஜவகர்ஜி (நாகர்கோவில்)

  • கண்ணீருடன் (2005)
  • வினை எச்சம் (2010)

ஜோ டி குரூஸ் (உவரி)

  • விடியாத பொழுதுகள் (2008)
  • Towards dawn (2010)

பீட்டர் ராயன்(இடிந்தகரை)

  • காயப்பட்ட கடற்கரை (2009)

டி அருள் எழிலன்(புத்தன்துறை)

  • ராஜாங்கத்தின் முடிவு (2007)
  • உத்தமபுரம் (2008)
  • பேரினலாதராஜா (2009)
  • ப்ரசிட்டாவின் கனவு
  • கூத்தாடிகள் ஓவியர் ஆதிமூலம்

ஜே.பி. வெனிஸ் (கோவளம்)

  • எங்கள் வானம் (2010)
  • நிலவே (2010)

குறிப்பு: (நெய்தல் வாசகர் வட்டங்களை ஆங்காங்கு உருவாக்கி, இப்படைப்புகளை வாசித்து, விவாதித்து,படைப்பாளிகளை ஊக்குவிக்க வேண்டும். மேலே கண்ட பட்டியல் முழுமையான ஒன்றல்ல. மேலும் பல படைப்பாளிகள் இருக்கலாம். அவர்களின் படைப்புகளையும் படியுங்கள். விவாதம் செய்யுங்கள் – ஆசிரியர்)

நன்றி: கொல்லணி

3 thoughts on “தென் தமிழக நெய்தல் படைப்பாளிகள்

  1. இடிந்தகரை மூத்த எழுத்தாளர் பானுமதி பாஸ்கோ அவர் நீலநிறப் பறவைகள் போன்ற நெய்தல் படைப்புகளை தந்துள்ளார்.

  2. இடிந்தகரை எழுத்தாளர் பானுமதி பாஸ்கோ . அவரது நூல்கள்…
    நீலநிறப் பறவைகள்
    தூரத்துச் சொந்தங்கள்
    வலம்புரி ஜானும் சில பனங்கிங்குகளும்…
    இடம் பெறவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *