பரதவர்களின் நாட்டார் மருத்துவம் – 3

தொற்று வியாதிகளுக்கான சிகிச்சை

காலரா, அம்மை போன்ற கொடிய தொற்று நோய்கள் பரதவர்கள் வாழும் பகுதிகளில் பரவினால் செபஸ்தியார் என்னும் புனிதரின் உருவத்தை வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வருகிறார்கள். (இந்துக்களிடம் மாரியம்மன் வசிக்கும் இடத்தைப் பரதவர்களிடம் புனித செபஸ்தியார் வகிக்கிறார்.) இவ்வாறு ஊர்வலமாகச் சப்பரத்தில் எடுத்து வரும்பொழுது உப்பையும், மிளகையும் கலந்து வீதிகளில் தூவுவதுமுண்டு.

டைஃபாய்டு, அம்மை, காலரா, மஞ்சட்காமாலை போன்ற தொற்று நோய்களுக்கு சிறுவர் சிறுமியர் ஆளாகினால் புனித அந்தோணியார், புனித ராயப்பர்(பீட்டர்) ஆகிய புனிதர்களில் ஒருவரை நினைத்து நோய் குணமானால் தலையை மொட்டையடிப்பதாகவும் காதில் வாளி அணிவதாகவும் வேண்டிக் கொள்ளுகிறார்கள். (தொற்று நொயின்றி வேறுபல உடற்பிணிகளுக்கும் சிலர் இவ்வாறு வேண்டிக் கொள்வதுமுண்டு.)

இவ்வேண்டுதலின்படி மொட்டையடிப்பதனை “பட்டம் வைத்தல்” என்றழைக்கிறார்கள். இது இந்துக்கள் மொட்டை அடித்துக் கொள்ளும் முறையிலிருந்து மாறுபட்டதாகும். நெற்றிப்பகுதிக்குச் சற்று மேலே ஒரு கயிற்றினைத் தலையைச் சுற்றி வட்ட வடிவில் கட்டியதைப் போல முடியானது ஒரே சீராகக் கத்தரித்து விடப்பட்டு எஞ்சிய தலைப்பகுதி முழுவதும் மொட்டையடிக்கப்பட்டிருக்கும். அந்தோணியாரை வேண்டிக் கொண்டவர்களால் இம்முறை பின்பற்றப்படும். இது “அந்தோணியார் பட்டம்” என்றழைக்கப்படும்.

நெல்லை மாவட்டத்தின் தென்கோடியில் உள்ள கடற்கரைச் சிற்றூர்களில் வாழும் பரதவர்கள் நாகர்கோவிலில் கோட்டாறு என்னும் பகுதியிலுள்ள புனித சவேரியார் தேவாலயத்திற்குச் சென்று பட்டம் வைத்துக் கொள்வதும் உண்டு.

அந்தோணியார் பட்டத்தை விடச் சற்று அகலமாக வட்ட வடிவில் கத்தரிக்கப் பட்ட பகுதி காட்சி தரும். இப்பட்டத்தைச் “சவேரியார் பட்டம்” என்றழைக்கிறார்கள்.

இராயப்பரை வேண்டிக் கொண்டவர்கள் தலையின் பின்பகுதியில் வட்டமாக மொட்டையடித்துக் கொல்கிறார்கள். இது “குருபட்டம்” என்றழைக்கப்படும்.

எனவே சிறுவர் சிறுமியரின் தலை மொட்டையடிக்கப்பட்டிருக்கும் முறையிலிருந்தே அவர்கள் எந்த புனிதரை வேண்டி முடி காணிக்கை அளித்துள்ளார்கள் என்பதனை எளிதில் அறிந்து கொள்ளலாம்.
முடி காணிக்கையுடன் காதில் வாளி அணிந்து கொள்வது “வாளிபூரூதல்” எனப்படுகிறது. வாளிபூரூவதில் முடிகாணிக்கையில் காணப்படும் வேறுபாடு கிடையாது. “இராயப்பர் வாளி” என்றெ வாளி அழைக்கப்படுகிறது, வேண்டிக் கொண்ட காலத்திற்கேற்ப இது சிறுவர் சிறுமியரின் காதில் பல ஆண்டுகள் கிடக்கும்.

ஆ. சிவசுப்பிரமணியன்
பாகம் 4 விரைவில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *