பீங்கான் தட்டுகளும் தோழர் பீட்டர் முறாய்ஸ்சும்

நடுக்கடலில் நிற்கும் கப்பலில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு பழைய துறைமுகத்திற்கு வரும் ‘‘லைட்ரேச்’’ தோணிகள் மிக விரைவாக பணியைச் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஏனெனில், வேலை தாமதமானால் கப்பலுக்குத் தாமத கட்டணத்தைத் தோணி உரிமையாளர்கள் அல்லது சரக்குகளைக் கப்பலில் இருந்து இறக்கி ஏற்றும் பணியைச் செய்யும் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் செலுத்தியாக வேண்டும். இதனால் தாமதத்தைத் தவிர்க்கும் வரைமுறைகளுள் ஒன்றாகக் கப்பலில் நடைத் தோணியில் பணிபுரியும் தோணித் தொழிலாளர்களுக்கும் கரிக்களத்தில் வேலை பார்க்கும் தலித் மக்களுக்கும் உணவு வழங்கும் பொறுப்பினைத் தோணி உரிமையாளர்களே மேற்கொண்டனர். இதனால் வீடு சென்று உணவு அருந்தி வருவதனால் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படுவதுடன் ஒரு சலுகையாகவும் அமைந்தது. இவ்வாறு வழங்கும் உணவைப் பனை ஓலைப் பட்டையில் வழங்கினர். பதனீர் குடிப்பது போல் பனையோலைப் பட்டையில் சோற்றைப் போட்டு உண்ண வேண்டும். இதை இழிவானதாகத் தொழிலாளர்கள் உணர்ந்தனர். எனவே, உணவை தட்டில் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துத் தோழர் பால தண்டாயுதத்தின் வழிகாட்டுதலுடன் ஒரு போராட்டத்தைத் தோணித் தொழிலாளர்கள் நடத்தினர்.

இப்போராட்டத்தை பரதவர் சமூகத்தைச் சேர்ந்த தோழர் பீட்டர் முறாய்ஸ் தலைமையேற்று நடத்தினார். கப்பல்களில் இருந்து சரக்குகளை ஏற்றி, இறக்கும் பணி இப்போராட்டத்தால் பாதிப்படைந்தது. முதலில் தொழிலாளர்களின் வேண்டுகோளைப் பொருட்படுத்தாத தோணி உரிமையாளர்கள் பின்னர் வேறுவழியின்றி அதற்கு உடன்பட்டனர். தொழிலாளர்களுக்குப் பீங்கான் தட்டுகளையும், கோப்பைகளையும் வழங்க முன்வந்தனர். ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பீங்கான் தட்டுகளையும் கோப்பைகளையும் தூத்துக்குடியில் வாங்க முடியாத நிலையில், தூத்துக்குடிக்கு மேற்கில் 50 கி.மீ. தொலைவில் உள்ள திருநெல்வேலியிலிருந்து வாங்கி வர, ஆள் அனுப்பினர். அங்கும் விற்றுத் தீர்ந்த பின்னர் மதுரையிலிருந்து வாங்கி வந்து அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வழங்கினர். தலித் மக்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் வர்க்க உணர்வுடன் ஒன்றிணைந்து நடத்தி வெற்றி பெற்ற இப்போராட்டம் தூத்துக்குடி நகரத் தொழிற்சங்க வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

நன்றி: ஆ. சிவசுப்பிரமணியம் – தோணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *