Annotations of the Stanzas in the Pathigam published on 24th September 2012

Our esteemed readers , we are sure would have benefitted by the explanations we offered for the two stanzas , they found in the Pathigam published on 14th September 2012, as collected from SANIKILLAAMAI PUDHUMAI.

As promised in the article on 9th, February, 2012, we give our readers the benefit of explanation that we found in The SANIKILLAMAI PUDHUMAI for two more stanzas that our readers found published on 24th September 2012.

The stanza reads as follows :–
”சண்பகச் சோலை சூழ்ந்தெழிலார்
வலம் செய நகர்தனில்
மேவும் கொள்ளை நோயைத்
தகவுடை கருணை கொண்டு
விலகச் செய்து
அவ்வூர்தனைக் காத்தது உலகறியுமே”
The explanation is as follows :–

26 – ம் புதுமை

கொள்ளை நோய் தேவதாயின் கிருபையால் ஒழிந்தது

இன்றைக்குச் சுமார் 750 வருக்ஷங்களுக்கு முன் ஃபிளாண்டர்ஸ் நாட்டில் வலன்க்ஷியன் என்ற பட்டணத்தில் கொள்ளைநோய் கண்டது. அக் கொள்ளை நோய்க்குத் தினமும் பலர் இரையானார்கள். சில நாட்களுக்குள்ளாக எண்ணாயிரம் பேர் மாண்டனர். ஆகையால், எங்கும் அழுகையும் பிரலாபமும் எழுந்தன; மக்கள் மனதில் திகில் ஏற்பட்டது. நோயாளியைவிட்டு விலகி இருந்தாலும், சிறந்த வைத்தியரிடம் நல்ல மருந்து சாப்பிட்டாலும் கொள்ளை நோயிலிருந்து தப்பிப்பது அரிதாக இருந்தது; ஏனெனில் கொள்ளைநோயின் கிருமிகள் ஆகாயத்தில் பரவி யாவரையும் தாக்கிச் சாவை விளைவித்தன.

மக்கள் யாவரும் கலங்கி நின்ற இந்நிலையில் அப்பட்டணத்துக்குப் பக்கத்தில் ஒரு தேவாலயம் இருந்தது. தவக் கோலம் பூண்ட ஒரு ரிக்ஷி பட்டணத்து மக்கள் மேல் இரக்கங்கொண்டு தேவதாயாரிடம் இரவும் பகலும் அழுகையோடு வேண்டிக்கொண்டார். தேவமாதா ஒருநாள் அந்தத் தபசிக்குத் தம்மைக் காண்பித்து, “அந்தப் பட்டணத்தார் கட்டிக்கொண்ட பாவங்களின் தண்டனையே அந்தக் கொள்ளை நோய். ஆனால் நீ அவர்களுக்காக வேண்டிக்கொண்டதால், நாம் அவர்களுக்கு இரக்கங் காண்பிக்க மனதாயிருக்கிறோம். ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை விதிக்கிறோம். அதாவது, பட்டணத்தார் யாவரும் அடுத்துவருகிற திருநாளான நாம் பிறந்த புனித தினத்திற்கு முந்தின நாளில் ஒருசந்தி அனுசரித்து, தங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு வேண்டிக்கொள்ளக்கடவார்கள்; அப்போது அன்றிரவு தானே ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில் சில அதிசயங்களைக் காண்பிப்போம்,” என்று திருவுளம் பற்றினார்கள்.

இந்தச் செய்தி தபசியின் மூலம் பட்டணமெங்கும் பரவிற்று. மக்கள் உள்ளத்தில் நம்பிக்கையும் ஆறுதலும் உண்டாகவே, சிறுவர் முதல் பெரியோர் ஈறாக யாவரும் அந்தத் திருநாளுக்குமுன் ஒருசந்தி யிருந்து வேண்டிக்கொண்டனர். அன்றிரவு எங்கும் ஒரே பரபரப்பு. தேவதாய் வாக்களித்த அதிசயத்தைக் காண யாவரும் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் திடீரென பன்னிரண்டு ஒளி வெள்ளங்கள் காணப்பட்டன. இவ்வொளி வெள்ளங்களின் நடுவே வானவர்க்கரசி பல்லாயிரம் சம்மனசுகள் புடைசூழ காட்சி தந்தார்கள். இக்காட்சியில் மக்கள் பரவசமடைந்து தேவ அன்னையைக் கைகூப்பி வணங்கி நின்றார்கள். அப்போது தேவதாய் கீழிறங்கி நகரத்தைச் சுற்றிவந்து தமது திருக்கையிலிருந்த ஒரு நூலால் அப்பட்டணத்தை வளைத்து மறைந்து போனார்கள்.

இதன் பொருள் பொதுமக்களுக்கு விளங்கவில்லை. ஆகையால், தேவதாயர் தபசிக்குத் தரிசனமாகி, “நாளை நமது திருநாள் ஆகையால் சூரியன் உதயமானவுடன் நாம் நகரத்தைச் சுற்றிப் போட்ட நூலைப் பட்டணத்தார் எடுத்தவுடன் கொள்ளைநோய் நீங்கிப்போகும்,” என்று திருவாய் மலர்ந்து மோட்சத்திற்கு எழுந்தருளிப் போனார்கள்.

தபசியார் இதை மறுநாள் காலையில் பட்டணத்து ஜனங்களுக்குத் தெரிவித்தார். அவர்கள் எல்லாரும் ஆவலோடு வெளியே புறப்பட்டுப்போய் தேவதாயார் போட்ட நூலை எடுக்கவே, கொள்ளை நோய் ஒழிந்தது. பட்டணத்து மக்கள் தேவதாயாரை வாயார வாழ்த்தி மனமாரப் புகழ்ந்து பாடினதுமன்றி, ஒரு நேர்த்தியான வெள்ளித்தட்டு செய்து தேவதாயார் தமது திருக் கையாண்ட அந்த நூலை ஒரு திருப்பண்டம் என அந்தத் தட்டில் வைத்தார்கள். அன்று முதல் இன்று வரை அந்நகர மாந்தர்கள் வருக்ஷந்தோறும் தேவதாயார் பிறந்த நாளில் பெருவிழா கொண்டாடி தேவதாயார் அப்பட்டணத்தைச் சுற்றிவந்த வழியே அந்த நூலைச் சுற்றுப் பிரகாரமாக எடுத்துச் சென்று சங்கித்து வருகின்றனர்.
——
The other Stanza that you found in the pathigam pulished on 24th September reads as follows;–

“ஒப்பறும் பொழிலார் அலெக்சாந்திரியா நகரில்
உனது எழில் அடைக்கலத்தே ஒப்பித்த
தாய் மகள் இரண்டு உயிரையும்
கொல்ல உன்னும்
ஒரு நீசனு
பய ஒளிவிழி மறைத்து
உனது சரணாடும் இருவரையும்
உயிர் காத்து இரட்சித்த சரிதைதனை
அறியார் இவ்வுலகில் எவருண்டு அம்மணி ! ”

The explanation for the stanza is as follows:–

29 – ம் புதுமை

தேவதாயின் அடைக்கலத்தில் வைக்கப்பட்ட தாயும் மகளும் ஆபத்திலிருந்து காப்பாற்றப்படல்

எகிப்து நாட்டில் அலெக்ஸாந்திரியா பட்டணத்தில் புண்ணியவான்களான தாய் தந்தை மகள் ஆகிய மூவர் கொண்ட ஒரு குடும்பம் இருந்தது. இவர்கள் தேவதாய் பக்தி பூண்டவர்கள் ; தர்ம சிந்தையும் குணமும் உடையவர்கள். ஒருநாள் தகப்பன் வேலை நிமித்தமாக தூரத்திலுள்ள கான்ஸ்டான்டிநோப்பில் நகரத்திற்குப் போக வேண்டியதாக இருந்தது. இதையறிந்த அவருடைய மனைவி கலங்கினாள். அவள் அவனை நோக்கி, ‘ ஆருயிர் தலைவா, நீங்கள் தூர தேசம் சென்று இருக்கும் காலத்து எனக்கும் மகளுக்கும் துணை யார் ? ‘ என்று கேட்டாள். அப்போது அவளுடைய கணவன், “ நமது வீட்டிலிருக்கிற கிழவன் மிகவும் நம்பிக்கைக்குரியவன். அவனையன்றி நான் உங்களைத் தேவமாதாவின் திருக்கையில் ஒப்படைக்கிறேன்; நான் தினமும் உங்களுக்காக அந்தத் தாயைப் பார்த்து வேண்டிக்கொள்வேன் ; அந்தத் தாய் உங்களுக்கு எவ்வித தீங்கும் வராதபடி இரட்சிப்பார்கள். நீங்கள் இருவரும் தினமும் தேவதாயாரைப் பார்த்து வேண்டிக்கொள்ளுங்கள் , ” என்று சொல்லி பயணமானான்.

கிழவனான ஊழியக்காரன் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் தான். என்றாலும் அவன் பசாசின் தந்திர வலையில் சிக்கினான். பண ஆசை அவனை எஜமானின் பொருட்களைக் கொள்ளையடிக்கத் தூண்டிற்று. எஜமான் தூரதேசத்திலிருந்ததால், அவனுடைய ஆஸ்திகளை எல்லாம் எடுத்துக்கொண்டு வேற்றூருக்குப் போய்ப் பிழைக்கத் திட்டமிட்டான். இந்தத் திட்டத்திற்கு எஜமானியும் அவளுடைய மகளும் தடையாக இருந்தனர். ஆகையால், அவர்களைக் கொன்றுபோட சமயந் தேடினான். ஒரு நாள் தாயும் மகளும் தங்களுடைய அறையில் இருந்தபோது, ஊழியக்காரன் சமையற் கட்டிலிருந்த ஒரு மிகக் கூர்மையான சூரிக் கத்தியைக் கையிலேந்தி அந்த அறையின் வாயிலை அடைந்தான். தேவதாயார் தமது பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த தாயையும் மகளையும் அற்புதமாக காப்பாற்றினார்கள். அதெப்படியெனில், அவன் வாயிற்படியை அடைந்ததும் , அவனுடைய கண்களுக்குத் தெரியாத ஒரு கை அவனைக் கீழே தள்ளிற்று. அவன் மிகவும் பயந்து பொத்தென்று கீழே விழுந்தான். இரண்டு கண்களிலும் ஒளி இழந்தான். அவன் திரும்பவும் எழுந்து நின்று வெறிகொண்டவனைப் போல் நாலாபக்கமும் தடவித் தடவி அறைக்குள்ளே போக முயன்றான், அவன் தடவிய அரவங்கேட்டு தாயும் மகளும் “யாரங்கே” என்று கேட்டனர். அவன் “இங்கே வாருங்கள்“ என்று அழைத்தான். அவர்கள் அவனைக் கவனியாமல் தங்கள் வேலையாக இருந்துவிட்டார்கள். ஊழியக்காரன் மீண்டும் ஒருமுறை “இங்கே வாருங்கள்” என்று இரைச்சலிட்டான். எஜமானி, “ஏன் பித்துக்கொண்டவனைப் போல் கத்துகிறாய்; உனக்கு ஏதாகிலும் உடனடியான காரியம் இருந்தால், இங்கே வந்து சொல்” என்றாள். இந்த வார்த்தைகளை அவன் கேட்டு வெட்கமும் ஆத்திரமும் அடைந்தான். ஆகையால், தன் கையிலிருந்த கூறிய கத்தியால் தன்னைத்தானே நெஞ்சில் குத்திக்கொண்டு குபுகுபுவென்று ஓடிய இரத்த வெள்ளத்தில் விழுந்து அழுதான். அழுகையைக் கேட்ட தாயும் மகளும் ஓடோடியும் வந்தனர். காயத்தையும் இரத்தத்தையும் கண்டு ஆச்சரியமும் துன்பமும் உற்றனர் ; இந்தச் செய்தி சர்க்காருக்கு எட்டினால், தங்கள்மேல் குற்றத்தைச் சாட்டுவார்களோ என எண்ணி அஞ்சினர். தேவதாய் அவர்கள் பக்கமிருந்து அவர்களைக் காப்பாற்றினார்கள்.

விரைவில் செய்தி ஊரெங்கும் பரவிற்று ; சர்க்கார் அதிகாரிகள் அங்கு விசாரணை நடத்த வந்தனர். நல்லகாலமாக கிழவன் இன்னும் உயிரோடு இருந்தான். போலீஸ் சேவகர்கள் அவனை இப்படிக் குத்தியது யாரென்று கேட்டபோது, அவன் தான் நினைத்த சதியையும் தனக்கு நேர்ந்ததையும் சொன்னான். ஆகையால், தாய்க்கும் மகளுக்கும் யாதொரு தீங்கும் வந்ததில்லை. கிழவனொவெனில், பாவசங்கீர்த்தனம் செய்யாமல் அவலமாகச் செத்தான்.

எஜமானிக்கு துரோகம் நினைத்த தன் ஊழியனின் பிரேதத்தை கல்லறையில் வைத்தபின், தன் மகளுடன் தேவதாயின் சுரூபத்தின்முன் சாக்ஷ்டாங்கமாக விழுந்து அந்தத் தாய் தங்களுக்கு வந்த பொல்லாங்கிலிருந்து அற்புதமாய் காப்பாற்றியதற்காக மிகுந்த தாழ்ச்சியோடே நன்றி கூறினாள்.

சிறிது காலத்திற்குள் கணவனும் திரும்பி வந்து சேர்ந்தான். அப்போது அவனிடம் அவள் நடந்தது எல்லாவற்றையும் கூறினாள். இருவரும் தேவதாயாருக்கு நன்றிகூறினதுமல்லாமல், அன்று முதல் தேவதாயார்மேல் முன்னிலும் அதிக பக்தி வைத்தார்கள்.

Please wait for the explanations for other stanzas in the weeks to come.

by A.X. Alexander

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *