Tag Archives: mumbai

மும்பை பரவர் சங்கத்தின் – 12ம் ஆண்டைய விழா

‘‘இயங்காமல் இருப்பதை விட இல்லாமல் இருப்பது சிறந்தது’’ என்ற வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்களின் பிரசித்திப் பெற்ற கூற்றிற்கு ஏற்ப பெயருக்கு அல்லாமல் முற்றிலும் செயல்படும் ஒரு சங்கம் இந்த பரவர் சமுதாயத்திற்கு தேவை என்ற எண்ணத்தின் அடிப்படையில் மும்பையில் பெரியவர்களின் வழிதுணையில் இளைஞர்களின் கரங்களால் தொடங்கப்பட்ட மும்பை பரவர் சங்கத்தின் பனிரெண்டாம் ஆண்டு விழா கடந்த ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி 2012 அன்று புதன்கிழமை தாதர் அண்டோனியோ அரங்கத்தில் நடைபெற்றது.

92ஆண்டுவிழாவிற்கு மும்பை பரவர் சங்கத்தின் துணைத்தலைவரும் பிரபல தொழிலதிபருமான திரு. ஆர்கே ரூபின் அவர்கள் தலைமை தாங்க அருட்தந்தை ஜெலஸ்டீன் ரொகட்ரீகஸ் ( குஜராத்), அருட்தந்தை ரஞ்ஜித் ஃபர்னாண்டோ ( நவி மும்பை) , தமிழர் களம் அமைப்பாளர் அரிமா வளவன் (திருச்சி), நெய்தல் படைப்பாளிகள் சங்க அமைப்பாளர் திரு. திவாகர் கூஞ்ஞா ( நாகர்கோவில்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவிற்கு திரு. புன்னை அந்தோனிசாமி ( புன்னைக்காயல்), திரு. மார்சியான் ஃபர்னாண்டோ ( பழையகாயல்) திரு. பென்னட் ஃபர்னாண்டோ ( கூட்டப்புளி) ஆகியோர் முன்னிலை வகிக்க கூட்டமானது பராம்பரியம் மிக்க பரதகுல திருப்பலி வழிபாட்டுடன் ஆரம்பமானது.

திரு. ராபர்ட் ஃபர்ணான்டோ- திருமதி மெர்லின் ராபர்ட் ( உவரி) ஆகியோரின் புதல்வன் செல்வன் ஆக்னல் இசையில் திருப்பலி பாடல்கள் களைகட்ட விழா தொடங்கியது. திருப்பலிக்கு பின்னர் இறைவணக்கத்துடன் பாடல் ஆரம்பமானது. பின்னர் சங்கத்தின் கமிட்டி உறுப்பினர் திரு. வெர்ஜில் ஃபர்னாண்டோ வரவேற்புரை ஆற்றினார்.

இதன் பின்னர் மும்பை பரவர் சங்கத்தின் பனிரெண்டாம் ஆண்டைய மலர் வெளியிடப்பட்டது. மலர் வெளியீட்டிற்கு முன்னுரை வழங்கிய பரவர் சங்கத்தின் செயலாளர் திரு. பென்னட் ஃபர்னாண்டோ அவர்கள் மும்பை பரவர் சங்கத்தின் சிறப்புகளுள் ஒன்றான மலர் வெளியீடு பற்றிய பெருமைகளை பட்டியலிட்டார். அதில் பனிரெண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வண்ணமயமான மலர்களை வெளியிட்டு எந்த பரவர் சங்கமும் செய்யாத சாதனையை மும்பை பரவர் சங்கம் செய்துள்ளதை கோடிட்டு காட்டிய போது அரங்கமே கைதட்டி ஆர்ப்பரித்து அகமகிழ்ந்தது.

91இதன் பின்னர் மும்பை பரவர் சங்கத்தின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றான ஏழைக்குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. வழக்கம் போல இந்த ஆண்டும் சுமார் ஏழு மாணவ மாணவியர்களுக்கு கல்வி நிதியுதவி வழங்கப்பட்டது. மும்பை கோவண்டி பகுதியைச்சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் மகன் வறுமை நிலையிலும பி..ஹெச்டி வரை படிப்பில் உயர்ந்துள்ளதை காட்டி அந்த மாணவனை ஊக்குவிக்கும் விதமாக இந்த விழாவில் ஊக்கத்தொகை வழங்கி கெளரவிக்கப்பட்டதை பார்க்கும் போது நெஞ்சம் நெகிழ்ந்தது.

இவ்வாறே இன்றைக்கு பிரபல பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரின் குடும்பம் பனிரெண்டு ஆண்டுகாலமாக மும்பை பரவர் சங்கத்தின் கல்வி நிதி உதவியை பெற்று அந்த குடும்பமே இன்று கல்வியில் ஒரு முன்னுதாரணமாக மும்பையில் இருப்பதற்கு மும்பை பரவர் சங்கம் ஒரு காரணமாக இருப்பதை சங்க செயலாளர் அவர்கள் சங்கத்தின் கல்வி சேவையின் பெருமையை குறிப்பிட்ட போது அரங்கத்தில் இருந்த அனைவரையும் கண்கள் கலங்க வைத்தது. இவ்வாறு மும்பை பரவர் சங்கமானது இதுவரை கிட்டத்தட்ட ரூபாய் 6 லட்சத்திற்கு மேல் கல்வி நிதியுதவி வழங்கி எல்லா சங்கத்திலும் உயர்ந்து நிற்பதை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது.

இதன் பின்னர் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்வாறே விதவைகளுக்கு நிதியுதவி, மருத்துவ நிதியுதவி ஆகியன வழக்கம் போல வழங்கப்பட்டன.

மும்பை பரவர் சங்கத்தின் முக்கிய நிகழ்வான வலம்புரி ஜான் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த ஆண்டு சிறப்புக்குரிய இந்த விருதானது நெய்தல் படைப்பாளிகள் சங்கத்தின் அமைப்பாளர் திரு. திவாகர் கூஞ்ஞா அவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டபோது அரங்கமே அதி்ர்ந்தது. இந்த விருதானது கடந்த ஆண்டு பிரபல எழுத்தாளரான எழிலனுக்கு வழங்கப்பட்டதை அப்போது நினைவு கூறப்பட்டது.

வழம்புரி ஜான் விருதை பெற்றுக்கொண்டு பேசிய திரு. திவாகர் கூஞ்ஞா அவர்கள் பரவர் சமுதாயம் படைப்பாளிகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என வழியுறுத்திப்பேசினார். மேலும் மும்பை பரவர் சங்கத்திடம் இருந்து இந்த விருதைப்பெறுவதில் தான் பெருமை அடைவதாகவும் குறிப்பிட்டார்.

இதனை அடுத்து மதிய உணவிற்கு பின்னர் நடிகர் சந்திரபாபு விருது நிகழ்ச்சி ஆரம்பமானது. நம் சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகளை கலைத்திறன்களில் ஊக்கப்படுத்தும் இந்த விருதானது இந்த ஆண்டு சிறந்த குழந்தை நட்சத்திரம் செல்வி ஜெஸ்லின் அவர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த விருதானது செல்வி நினோஸ்கா பென்னட் ஃபர்னாண்டோ அவர்களுக்கு வழங்கப்பட்டது அப்போது நினைவு கூறப்பட்டது.

இதன் பின்னர் சிறப்புரையாக தமிழர் களம் அமைப்பாளர் அரிமா வளவன் அவர்கள் கூடன்குளம் அணுமின்நிலையமும் சில நிஜங்களும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அப்போது கூடன் குளம் அணுமின்நிலைய போராட்டம் குறித்து அவர் படிப்படியாக விவரித்து ஒரு சிறப்பான உரையை வழங்கினார். மேலும் இந்த போராட்டத்தின் போது மும்பை பரவர் சங்கம் ஆற்றிய பங்கை விவரித்ததுடன் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மும்பை பரவர் சங்கம் எத்தகைய மறக்க முடியாத பங்கை ஆற்றியது என்பதையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

பின்னர் சங்க துணைத்தலைவர் திரு. ஆர்கே ரூபின் அவர்கள் தனது தலைமை உரையில் மும்பை பரவர் சங்கத்தின் பெருமைகளை விளக்கினார். மேலும் வரும் காலத்தில் இந்த சங்கமானது இன்னும் வலுப்பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இறுதியில் மும்பை பரவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. புன்னை அந்தோனிசாமி அவர்கள் நன்றியுரை கூற மும்பை பரவர் சங்கத்தின் மற்றுமொரு வெற்றிச் சரித்திரம் கல்வெட்டுகளில் பதியப்பட்டது.