தாராட்டு மாலை

தாலாட்டு என்னும் சொல் தாராட்டு என மருவி வழங்கியுள்ளது என்பதனைத் ‘தாராட்டு மாலை’ என்னும் நூல் வழி அறியலாம். இதனை சிப்பிகுளம் வித்துவான் சவேரியா பிச்சை கொறேரா 1915 இல் இயற்றியுள்ளார்.
காப்புச் செய்யுள் நீங்கலாக 105 கண்ணிகளைக் கொண்டுள்ளது. பாலகர்க்கு இசையின்பம் தர, அன்னையர்க் குதவியாக இந்நூல் ஆக்கப்பெற்றது. கிறித்தவர் மட்டுமன்று; அனைவரும் பயனுறுமாறு இந்நூல் அமைந்துள்ளது.

மதுவின் கொடுமையை;-

“மதுபானம் நல்லதென்பர்; மகிழ்ச்சிதரு மென்பர்;
அதுதான் முந்தையர்கள் அருந்தி வந்த தென்பர்;
வலிதீர்க்கும் என்பர் அது பிணிதீர்க்கு மென்பர்;
கலிதீர்க்கும் என்பர் அது குளிர்தீர்க்கு மென்பர்;
இத்தனையும் பொய்மையலால் இம்மிநிச மில்லை;
புத்திரனே! எட்டுணையும் புசிக்கிறது தொல்லை;
தொட்டிடிலோ கெட்டிடுவாய் துன்பமிகக்கொண்டு
கெட்டவர்கள் எண்ணிறந்தோர் கெடுமதுவைஉண்டு;”

என்று பாடுகிறார் புலவர்.

சிறந்த அறவுரைக் களஞ்சியமாக இந்நூல் திகழ்வதை;-

”கற்றோரைச் சேர்வதல்லால் கயவர்வழி சேரேல்
பெற்றோர்சொல் மொழிக்கெதிராய் பிறிதுவழி பாரேல்
குருமொழியைத் திருமொழியாய் கொள்வதுன்றன் கடமை
வருபலசோ தனையுள்மனம் வைக்கிலது மடமை
வந்தபொருள் அத்தனையும் வாரிவிட்டி டாதே
தொந்தியுறப் பேருணவு துய்த்திடப்ப டாதே”
என்னும் கண்ணிகளால் அறியலாம்

முனைவர் சூ.இன்னாசி எழுதிய கிறித்தவத் தமிழ்க் கொடை யிலிர்ந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *