இந்து பரதர்களின் தேர்
பரதர்கள் இந்துக்களாக இருந்தபொழுது, இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உத்தரகோசமங்கை கோயிலுக்கு முற்றிலும் கருங்கல்லாலான தேரினைச் செய்து வழங்கினர். அவர்கள் அப்பொழுதே தங்களது குல தெய்வத்திற்கு தேரிழுக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர்.
இந்த விபரம் பரத குல சாதித் தலைவர்களின் இல்லமான பாண்டியபதியில் பாதுகாக்கப்பட்டு வரும் கோப்புகளில் குறிப்பிடப் பட்டுள்ளது.
உத்தரகோசமங்கைக் கோவிலில் உள்ள கற்றேரின் மாதிரியே, பனிமய அன்னையின் பொற்றேர் வடிவம் எனக் கூறப்படுவதுண்டு,
மேலும் விஜய நகர பேரரசின் பூர்வீகத் தலைநகரமான ஹம்பி (Hampi, on the South Bank of Tungabhadra River) என்ற ஊரில் வித்தாலா கோவிலின் (Vitthala Temple) உள்புறம் வடிவமைக்கப்பட்ட கல் தேரும் இது போன்றே இருக்கும்.
*பனிமய அன்னையின் முதல் தேர்*
பரிசுத்த பனிமய அன்னையின் அற்புத திருச்சுரூபத்தை, 1713-ம் ஆண்டில் கட்டப்பட்ட அன்னையின் புதிய ஆலயத்தில் ஆடம்பரமாகவும் சாஸ்வதமாகவும் நிறுவியதின் நினைவாக, 1720-ம் ஆண்டில் பரத குல சாதித் தலைவர் தொன் கபிரியேல் ஆரோக்கிய தெக்குரூஸ் கோமஸ் (1716-36) அன்னைக்கு ஓர் அழகிய சிறு தேரினை உருவாக்கினார்.
இதுவே, பனிமய அன்னை தூத்துக்குடி வீதிகளில் வலம் வந்த முதல் தேர்!
இந்த அழகிய சிறு தேரை, பரத மக்கள் முத்துச்சிலாபங்களில் செழிப்படைந்திருந்த ஆண்டுகளில் மட்டும் நகர்வலம் வரச்செய்து, அன்னையை மகிமைப்படுத்தி நன்றி தெரிவித்துள்ளனர்.
*சித்திரப் பொற்றேர்*
1720-ம் ஆண்டில் முதன் முதலில் வலம் வந்த தேரானது, செழிப்பான முத்துக்குளித்தல் காலங்களில் தொடர்ந்து தூத்துக்குடி வீதிகளில் ஆடம்பர பவனி வந்து, 1779-ம் ஆண்டுக்கு பிறகு சுமார் 25 ஆண்டுகள் சோதனைக் கால இடைவெளியில் கவனிப்பாரற்று சேதமடைந்திருக்க வேண்டும்.
பனிமய அன்னையின் திருச்சுரூபம் தூத்துக்குடி நகரை வந்தடைந்த 250-வது ஆண்டு (1555-1805) விழாவின் போது தங்கத்தாய்க்கு தன்னிகரில்லா தங்கத்தேர் ஒன்று செய்ய பரத குலமக்கள் விழைந்தனர்.
1805-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் நாளான பனிமய அன்னையின் திருநாளன்று நகர்வலம் வரவேண்டிய தேர் ஆறு மாதம் கழித்து 1806-ம் ஆண்டு பெப்ரவரி 2-ம் நாளன்று மாதாவின் சுத்திகரித்த திருநாளில் பவனி வந்தது.
எங்கும் காண்பதற்கரியதும், பொன்னுலகில் இருந்து இறங்கிய தேர் என இறும்பூது கொள்ளத்தக்கதுமான இச்சித்திரத் தேர், நகரின் தலைசிறந்த சிற்பி நேவிஸ் பொன்சேக்கா அவர்களால் 4000 பொன்வராகனில், அதாவது சுமார் ஒரு இலட்ச ரூபாய் செலவில் செய்யப்பட்டது.
இந்தச் சித்திர பொற்றேர் ‘தங்கத்தேர்’ எனும் அதன் பெயர்கொப்ப எங்கணும் தங்கமே துலங்க மகோன்னதமான நுணுக்க வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டது. சித்திரச் சிற்பத்திறன் துலாம்பரமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ள இந்தத் தேரில், சித்திர வேலைபாடுகள் மட்டுமல்லாமல் முழுச் சுரூபங்களாக யூத மன்னர்கள் பன்னிருவர், சுவிசேஷகர்கள் நால்வர், சர்வேசுவரன் மேல் சிரசு பீடத்தில் பரமபிதா , மாடப்புறா ரூபத்தில் தூய ஆவி, கடல் மனுஷ மனுஷிகள் மற்றும் வானதூதர்கள் சிறப்புறக் காணப்படுகிறார்கள்.
*இன்றையத் தேர்*
சுமார் 75 அடி உயரத்தில் மிக உயரமாக அமைக்கப்பட்ட அன்னையின் இத்தேர், பிற்காலத்தில் ஜெபமாலையின் 53 மணிகளை குறிக்கும் வகையில் 53 அடி உயரத்திற்கு குறைக்கப்பட்டது.
தங்கத்தேரின் மேல்பகுதியில் உள்ள விடி வெள்ளி போன்று ஐந்து முனைகளுடைய பெரிய விண்மீன், இறைவனின் அன்னை கன்னிமாதா ‘விடியற்காலை நட்சத்திரம்’ (Morning Star – Stella Maris) என்பதை உணர்த்துகின்றது.
அதற்குக் கீழே சதா சுழன்ற வண்ணம், 9 பெரிய வெண்பொன் மீன்கள் இருக்கின்றன. தேவமாதா விண்ணுக்கும் மண்ணுக்கும் மகாராணியாக மகுடம் சூட்டப்பட்டதை நினைவுறுத்த ஒரு அழகிய பொன்முடி அமைக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ் இவ்வுலகைப் படைத்த இறைவன் பிதாவாகிய சர்வேசுவரன், முதியவர் தோற்றத்தில் ஓர் சிறு அழகிய பீடத்தில் காட்சியளிக்கிறார். சுற்றிலும் நான்கு பக்கத்திலும் இருபக்க உருவங் கொண்ட நான்கு வானதூதர்கள் பறந்த நிலையில் உள்ளனர்.
இறைத் தந்தையின் உருவத்திற்குக் கீழ் தூய ஆவியானவர் வெண்புறா வடிவில் காட்சியமைக்கப்பட்டுள்ளார். அடுக்கடுக்காக ஒரு சிறிய தூண், நடுத்தரத் தூண், பெரிய தூண் வீதம் நான்கு பக்கமும் பன்னிரு தூண்கள் மிக நுண்ணிய வேலைப் பாடுகள் கொண்டு காணப்படுகின்றன.
தங்கத்தேரின் நடுப்பகுதியில் சித்திர வேலைப்பாடுகள் சிறப்புடன் செய்யப்பட்ட அழகிய பீடத்தில் பனிமய அன்னையின் திருச்சுரூபம் காட்சியளிக்கின்றது. குழந்தை வடிவில் இறைமகன் இயேசு பனிமய அன்னையின் இடக்கரத்தில் அமர்ந்து அருள் பாலிக்கின்றார்.
அன்னையின் திருச்சுரூபம் தாங்கும் பீடத்தின் மேல்பகுதி வளைவின் முனைகளில் குழந்தை உருவில் இரு வானதூதர்கள் என நான்கு பக்கங்களிலும் எட்டு வானதூதர்கள் அமைந்துள்ளனர். மன்னர்க்கு மன்னராம் இயேசுவை இந்த உலகிற்கு அளித்த அன்னை என்பதை நினைவுறுத்த , பனிமய அன்னையைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் தாவீது அரசர் முதல் இயேசு பாலனைக் காணவந்த மூன்றரசர்கள் உட்பட பன்னிருவேந்தர்கள் சுற்றிலும் வைக்கப்பட்டுள்ளனர்.
அரசர்கள் நிற்கும் அகன்ற பீடப்பகுதியின் கீழ் நான்கு மேல் முனைகளிலும், நான்கு கிளிகளின் தலைகள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.
அதன் கீழ்பக்கத்திற்கு மூன்று புனிதர்கள் என நான்கு பக்கங்களில் பன்னிரு புனிதர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதில் நற்செய்தியாளர்கள் நால்வரும், புனிதர்கள் சவேரியார், இஞ்ஞாசியார், தோமையார் ஆகியோரும் உண்டு.
இடுப்பிற்கு மேல்பாகம் மனித உருவமும் கீழ் பாகம் மீன் வடிவமுங்கொண்ட கயல் கன்னியர் இருவர், கயல் காளையர் இருவர் என நால்வர் நான்கு திசை நோக்கிக் கைகூப்பிய வண்ணம் வணங்கி நிற்கின்றனர்.
நான்கு பெரிய சக்கரங்களும், நடுவில் இருசிறு சக்கரங்களும் தாங்கி நிற்கும் பனிமய அன்னையின் இந்தத் தேரில் உள்ள ஒவ்வொரு பகுதியும் மிக அழகான நுட்பத்துடன் வெகு நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.
பனிமய அன்னையின் திருச்சுரூபத்தை அன்னையின் ஆலயத்திலிருந்து அழகிய பொற்றேருக்கு கொண்டு வருவதற்காக ஓர் அழகிய முத்துப் பல்லக்கு உள்ளது.
தங்கத் தேரை இழுக்கும் கயிற்றின் அகலம் அரை அடி, நீளம் ஐம்பது அடிகள், முன்னும் பின்னும் இக்கயிறுகளைக் கொண்டு மக்கள் அன்னையின் தேரை இழுத்துச் செல்வார்கள்.
*தங்கத்தேர்ப் பவனி*
முதன் முதலில் பனிமய அன்னையின் தங்கத்தேர் 1806-ம் ஆண்டு பெப்ருவரி 2-ம் நாளன்று. மாதாவின் சுத்திகரித்த திருநாளில் வலம் வந்தது.
அதன் பின்னர், பனிமய அன்னையின் திருநாளான ஆகஸ்ட் 5-ம் நாளன்றுதான், தங்கத்தேர்ப்பவனி பதின்மூன்று முறை சீர்பரவர் திருமந்திர நகராம் தூத்துக்குடி நகரில் வலம் வந்துள்ளது.
இதுவரை பதினான்கு முறை தங்கத் தேர் வலம் வந்த ஆண்டுகள்: – 1806, 1872,1879,1895,1905,1908,1926,1947,1955,1964,1977,1982,2000 மற்றும் 2007.
by சொர்ணராஜன் விக்டோரியா
Thank u for giving history about our snow shine church and the history of the golden thir it will easy to understand how it will happen in the past so very much thank u for it u done a great job.
P.Antony Christian gomez
ur msg realy very nice i like this ur msg very thanks bro
L.S JOHNY.P.RAYEN