பெருமணல்

இந்திய திருநாட்டின் தென்கோடி எல்லையின் கடற்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூரின் பெயரே, பெருமணல்.

பெருமணல் பண்டைய தமிழ்நாட்டில் சிறப்புமிக்க பேரூராகத் திகழ்ந்தது என்பதுவும், புனித பிரான்சிஸ் சவேரியாரின் வருகையினால் மாற்றம் பல பெற்றும் சிறப்புற்று கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் தலைமைப் பங்காகச் சிறப்பிடம் பெற்றிருந்தது என்பதுவும் வரலாற்று உண்மை. முத்துக்குளித்துறை கடலோரப் பகுதியின் பெரும்பாலான ஊர்கள் மீட்பர் இயேசுவின் பன்னிரு சீடர்களுள் ஒருவரின் பாதுகாவலில் அமைந்திருக்க பெருமணல் ஊர் புனித மினவினமாதா – புனித எலிசபெத்தம்மாள் இவர்களின் பாதுகாவலில் அமைந்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றது.

118பெருமணல் பண்டைய நாளில் கல்தோன்றி மண் தோன்றா காலத்தே மூத்த தமிழ் நல்லுலகத்து பெருமைமிக்க பேரூராக விளங்கியது என்பது உண்மை. அன்றைய நாட்களில் வான் பொய்க்காது தவறாமல் பருவமழை பொழிந்தது.
செழிப்புற்ற வயல்பரப்பு, கடற்பரப்பு மற்றும் மணல் திட்டுகள் ஊரின் அமைப்பு இவையாவும் பெருமணல் ஊருக்கு அழகு மட்டுமல்ல, அனைவரையும் தம்பால் ஈர்க்கின்ற பெருமையும் கொண்டிருந்தது. பெருமணல் பரதகுல மக்கள் ஆன்மீக நெறியிலும், இறைப் பற்றிலும் சிறப்புற்ற மக்களாய் வாழந்தனர். பண்டைய நாள் தொட்டு, கடற்கரை பகுதிகளில் வாழ்ந்த பரதகுல மக்கள் வர்ணனை வழிப்பட்டு வந்தனர் என்பது பழம்பெரும் இலக்கியமான தொல்காப்பியம் மூலம் அறியப்படுகிறது.

‘வர்ணன் பெருமணல் உலகமாகிய நெய்தல்
நிலமக்கள் வணங்கிய தெய்வம்.’

நாளடைவில் வர்ணன் வழிபாடு நீங்கி, பரதகுல மக்கள், திருச்செந்தூர் முருகனை வழிபட்டனர். பண்டைய பெருமணல் மக்களின் சமயத்தைப் பற்றி கூறுமிடத்து அவர்கள் மீனாட்சி அம்மன் மற்றும் பகவதி அம்மன் ஆகிய இரு பெண் தெய்வங்களையும் வழிபட்டனர் என்று அறியப்படுகிறது.

முத்துக்குளித்துறைப் பகுதி அனைத்தும் பாண்டிய நாட்டின் அரசாட்சிக்கு உட்பட்டிருந்தது. பாண்டிய நாட்டின் கடற்கரை எல்லை ஊராக பெருமணல் அமைந்திருந்தது. நாட்டை ஆண்ட மன்னர்களின் ஆதரவைப் பெற்ற முகமதியர்கள் 1516 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில், கடல் வாணிபத்தில் தலைசிறந்து விளங்கினர். முத்துக்குளித்துறைப் பகுதியை குத்தகையாய் பெற்ற முகமதியர் முத்தெடுக்கும் தொழிலில் முழு ஆதிக்கம் பெற்று பரதவர்களை அடிமைகளாக நடத்தத் தொடங்கினர். எனவே, பரதவர் பலமுறை சீறியெழுந்து சண்டை செய்தனர். அதன் விளைவாகப் பரதவ மக்களின் துன்பம் பெருகியது. இந்த நேரத்தில் போர்த்துக்கீசியரின் வருகை, இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் பெரும் விளைவுகளையும், வியத்தகு மாற்றங்களையும் ஏற்படுத்தியது. இந்தப் போர்த்துக்கீசியரின் வருகை காரணமாகவே கிறிஸ்தவ மறை, பரதகுல மக்களிடையே காலூன்றி, வளர ஆரம்பித்தது.

போர்த்துக்கீசியர்கள் கன்னியாகுமரி முதல் மன்னார் வளைகுடா வரையிலுள்ள பரதவ மக்களுக்கு உதவிட முன்வந்தனர். கைம்மாறாக அவர்கள் பரதகுல மக்களிடமிருந்து பொன்னோ, பொருளோ எதிர்பார்க்கவில்லை. ‘உண்மையான ஒரே இறைவன் உலக மக்கள் மட்டில் கொண்டுள்ள அன்பினால் பரிசுத்த கன்னிமரியாள் வழியாக இயேசுகிறிஸ்துவாய் இம்மண்ணில் பிறந்து, வாழ்ந்து, சிலுவை மரணம், உயிர்ப்பு இவற்றின் வழியாக மனிதனை மீட்டார்’ என்ற மறை உண்மையை பரத குல மக்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு நிபந்தனையை மட்டும் விதித்தனர். பெருமணல் பெரியோர்களும், எல்லா மக்களும் உண்மையாகிய இறைவனைப் பற்றிய நற்செய்தியை ஏற்றுக் கொண்டனர். எல்லோரும் உடனடியாக ஞானஸ்நானம் என்ற முதல் திருவருட்சாதனம் பெற்றனர்.

கத்தோலிக்க கிறிஸ்தவ மறையுண்மைகளை பெருமணல் மக்களுக்கு தெளிவுற எடுத்துரைத்து அம்மக்களை மேம்படுத்தியவர் புனித பிரான்சிஸ் சவேரியார். பெருமணல் மக்கள் எல்லோரையும் கத்தோலிக்க திருச்சபையில் சேர்த்து, அவர்கள் தங்கள் கிறிஸ்தவ விசுவாசத்தில் ஊன்றி நிற்க உறுதுணை புரிந்தவர் முத்துக்குளித் துறையின் பாதுகாவலரான புனித சவேரியார். இன்றைய பெருமணல் புனித பிரான்சிஸ் சவேரியாரின் கைவேலைப்பாடு என்று கூறுமளவுக்கு, அப்புனிதர் பெருமணல் ஊரில் பணிபுரிந்துள்ளார்.
பெருமணல் மக்கள் இதுகாறும் பெண் தெய்வங்களாகிய பகவதிஅம்மன், மீனாட்சி அம்மனை வழிபட்டு வந்தனர். 119பகவதி கன்னியாக இருந்தவள் மீனாட்சி திருமணம் ஆனவள். பெருமணல் மக்களின் இறை உணர்வை புரிந்து கொண்ட சவேரியார் தேவமாதா முப்பொழுதும் கன்னியானவள் என்ற உண்மையை எடுத்துரைத்து, பகவதி அம்மனுக்குப் பதிலாக தேவமாதாவையும், மீனாட்சி அம்மனுக்குப் பதிலாக எலிசபெத்தமாளையும் சுட்டிக் காட்டினார். இந்த இரண்டு பெண்களையும் எடுத்துக் காட்டி, புனித மினவினமாதாவாகிய தேவமாதாவுக்கு பெருமணல் ஆலயத்தை அர்ப்பணித்தார். புனித சவேரியார் தாமாகவே பெருமணல் ஊரில், புனித மினவின மாதாவிற்கு குடிசைக் கோவிலைக் கட்டினார். மேலும் 1571, 1644, 1715-ம் ஆண்டுகளின் அறிக்கைப்படி, பெருமணலின் புனித மினவினமாதா ஆலயம் இருந்தது என்பது உறுதி செய்யப்படுகிறது.

சவேரியார் பெருமணல் ஊருக்கு ஏழுமுறை வந்துள்ளார் என்றும், இறுதியாக 1548-ம் ஆண்டில் வருகை புரிந்துள்ளார் என்றும் அறியப்படுகிறது. மேலும், இனிமேல் தம் உதவி இல்லையென்றாலும் இப்பரதவ மக்கள் விசுவாசத்தில் வளர்ச்சியடைவார்கள் என்ற நிறைந்த மனத்துடனே, பெருமணல் ஊர் மக்களிடமிருந்து பிரான்சிஸ் சவேரியார் விடைபெற்றுக் கொண்டார். சவேரியாரின் வருகைக்குப் பின் பெருமணல் தம் வளர்ச்சிப் பருவ காலத்தில் (1549-1631) பெரியதாழையில் தங்கிய குருவானவரின் கண்காணிப்பில் வளர்ந்து வந்தது. முத்துக்குளித்துறைக் கடலோரப் பகுதிவாழ் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் அனைவரும் முதலில் கோவா மறைமாவட்ட ஞான ஆளுகைக்கு உட்பட்டிருந்தனர் 1557-;ம் ஆண்டு கொச்சி மறைமாவட்டம் நிறுவப்பட்டதும் முத்துக்குளித்துறை முழுவதும் கொச்சி மறைமாவட்ட ஆளுகைக்கு உட்பட்டது. 1609-ம் ஆண்டு முதல் 1620-ம் ஆண்டு வரையிலும் முத்துக்குளித்துறைப் பகுதிகளில் பணியாற்றிய இயேசு சபைக் குருக்கள் வெளியேற்றப்பட்டனர். இக்காலத்தில் பெருமணல் ஊர் கன்னியாகுமரியில் தங்கியிருந்த குருவானவரின் கண்காணிப்பில் வளர்ச்சிப் பெற்றது. இவ்வேளையில் சவேரியார் பெருமணலில் கட்டிய புனித மினமினமாதா குடிசைப் கோவில் புயற்காற்றினால் இடிந்து வீழ்ந்தது. பெருமணல் கணக்கப்பிள்ளை திரு.பேத்ரோ லூயிஸ் அவர்களின் நன்முயற்சியாலும், பெருமணல் மக்களின் ஒத்துழைப்பினாலும் போர்த்துகீசியரின் உதவியினாலும் சவேரியார் கட்டிய அதே இடத்தில் அதே சிலுவை வடிவில் கற்கோவில் கட்டப்பட்டது. 1641-ம் ஆண்டு முதல் பெருமணலின் குரு ஒருவர் நிலையாக தங்கினார். முத்துக்குளித்துறைப் பகுதியின் தலைமைப் பங்குகளில் ஒன்றாக பெருமணல் விளங்கியது. கூட்டப்புளி, இடிந்தகரை, கூத்தன்குழி ஆகிய ஊர்களை இணை ஊர்களாகக் கொண்டு பெருமணல் தலைமைப் பங்குத் தளமாகத் திகழ்ந்தது. சுருங்கக்கூறின் பெருமணல் ஞானச் செல்வத்திலும், பொருள் வளமையிலும், சமூக பண்பாட்டிலும் தலைச்சிறந்தோங்கி எல்லா மக்களையும் கவருகின்ற வகையில் மிகவும் அழகுடன் காட்சியளித்தது.

1967-ம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் தந்தை தேவசகாயம் பங்கு பொறுப்பினை ஏற்றார். புதிய ஆலயமொன்றினை எழுப்ப வேண்டும் என்று தீர்மானித்து ஆயரின் அனுமதியுடன் 23.10.1968-ஆம் நாளில் ஆலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினர். 1976-ம் ஆண்டு நவம்பர் மாதம் பெருமணல் பங்கு பொறுப்பேற்ற இராஜரீகம் அடிகளார் 1981-ம் ஆண்டு ஜீன் மாதம் வரையிலும் பணியாற்றினார். தாம் பணியாற்றிய காலத்தில் ஏற்கனவே, இடப்பட்ட அடித்தளத்தின் மீது புதிய ஆலய கட்டிடம் எழுப்பி அதனை முடிப்பதில் தம் முழுக்கவனத்தையும் செலுத்தினார். அதன் பலனாக 1980-ம் ஆண்டு நவம்பர் திங்கள் 20-ம் நாள் மிகவும் சிறப்பான முறையில், பெருமணலில் புனித மினவினமாதா புனித எலிசபெத்தம்மாளின் புதிய ஆலயம், அன்றைய கோட்டாறு மற்றும் மதுரை மறைமாநில பேராயருமான மேதகு ஆரோக்கியசாமி ஆண்டகை அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டது.

120வானளாவ உயர்ந்து நிற்கும் கோபுரங்களும், கம்பீரமாக காட்சியளிக்கும் ஒற்றைக் கல்லினால் ஆன கொடிமரமும், இன்றளவும் பெருமணல் மக்களின் பக்திக்கும் விசுவாசத்திற்கும் சான்றுகளாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும், மே31-ம் தேதி நடைபெறும் ஆண்டுவிழாவும் இன்றும் மெருகூட்டுவதாக உள்ளது. புனித மினவின அன்னை பல சிறப்பு வரங்களால் பெருமணல் மக்களை ஆசீர்வதிக்கிறார். பெருமணல் மக்களின் வாழ்வும், ஆதாரமும், செல்வமும், செழிப்பும், உடல்நலமும் பலவகை பேறுகளும் அன்னையால் என்றாலும், சிறப்பான ஒன்று பிரசவத்தில் உதவுவது. புனித கன்னிமரியாள் எவ்வாறு புனித எலிசபெத்தமாளை சந்தித்து உதவி செய்தாரோ, அவ்வாறே பேறுகாலத்தில் இருக்கும் ஒவ்வொரு தாயையும் அன்னை மரியாள் சந்திக்கிறாள். அன்னை சந்திப்பதின் புதுமை என்னவென்றால், அன்னையில் உதவியால் இதுவரை, பெருமணலின் வரலாற்றில் எந்த தாயுமே பேறுகாலத்தில் இறந்ததேயில்லை. உள்ஊரில் மட்டுமல்லாது, வெளியூர்களிலிருந்து மக்கள் குழந்தை பேறு கேட்டும், சுகப்பிரசவம் நாடியும் அன்னையை வேண்டி வருவது கண்கூடான காட்சி.

121கிறிஸ்தவர்களாக மாறி பல்லாண்டுகள் கடந்தாலும், அன்னை தன் மக்களை இன்றும் உண்மையான விசுவாசத்தில் காத்து வருகிறாள். கார்மேகம் போல் பல இன்னல்கள் சூழ்ந்தாலும், அன்னை தன் பிள்ளைகளை தன் மாந்தைக்குள் வைத்து காக்க தவறுவதில்லை. பெருமணலின் ஒவ்வொரு மகனும் , மகளும் தன்னுடைய வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் அன்னையே காரணம் என சொல்லத் தவறுவதில்லை. பேயின் தொந்தரவுகளிலிருந்தும், கொடிய பஞ்சம் மற்றும் வறட்சியிலிருந்து ஏனைய பிற இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து எம்மை காத்து வருகிறாள். கடலிலோ தரையிலோ வேலை செய்யும் போது அன்னையே உடனிருக்கிறாள். எல்லா இல்லங்களின் இல்லத் தலைவியாக அன்னையிருந்து செயல்படுகிறாள். அன்னையின் பாசமுள்ள பிள்ளைகளாய் வாழ்வோம். அவள் அன்பில் நிலைப்போம்.

by Maria Rose Shilpa

2 thoughts on “பெருமணல்

  1. Hai Dear Maria Rose Shilpa ,BL It was good to read and now i came to know about village. i really admire ur writing in this small age u came to know many thing. keep writing may Ur mother Mary bless and b with u.

  2. பெருமணல் வரலாற்றையும், சிறப்பையும் எடுத்துரைத்ததற்கு நன்றிகள்..
    பரதகுல புகழோங்கச்செய்யும் காரணிகளில் முதன்மையானதாக பார்க்கிறேன்..
    வாழ்த்துக்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *