செவாலியர் தியாகராஜா பிஞ்ஞேயிரா

செவாலியர் திரு.தியாகராஜ் பிஞ்ஞேயிரா 12-5-1906 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் புன்னைக்காயலில் பிறந்தார். இவர், புன்னைக்காயலில் ஆரம்பக்கல்வி பயின்று, சென்னையில் உயர்கல்வி முடித்து, பொருள் ஈட்டும் வண்ணம் இலங்கை சென்றார். தன் சிறிய தந்தையிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அவரிடம் வணிக நுட்பங்களைத் தன் கூர்ந்த மதியில் கண்டுணர்ந்து, கொழும்பில் “ரெக்ஸ் ஏஜென்ஸிஸ்” என்ற நிறுவனத்தை ஏற்படுத்தினார்.

இரண்டாம் உலகப்போரின் போது அவர் தமிழகம் வந்து “ரெக்ஸ் ஸ்டோர்ஸ்” என்ற நிறுவனத்தையும் அதன் பின்னர் சென்னைக்கு குடிபெயர்ந்து “ரெக்ஸ் டிரேடிங் கம்பெனி” எனும் ஏற்றுமதி வணிக அமைப்பினையும் உருவாக்கினார். குடியரசுத் தலைவர், சீரிய வணிக நிறுவனங்களுக்கு வழங்கும் மிக உயர்ந்த “தேசிய விருந்தினை” ரெக்ஸ் டிரேடிங் கம்பெனி இவர் தம் தலைமையில் பெற்றது.

“செவாலிய “ பட்டம் போப்பாண்டவரால் சிறந்த இல்லறத் தலைவர்களுக்கு வழங்கப்படும் பெரும்பட்டமாகும். சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து அறப்பணி புரிபவர்களுக்கு மட்டுமே இப்பட்டம் வழங்கப்படும். இவ்விருதினை தமிழகத்தின் அனைத்து பேராயர்கள் இவருக்கு வழங்க ஒரு மனதாக, போப்பாண்டவர்க்கு பரிந்துரை செய்தனர். இப்பட்டம் 1985 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. “T.R. Pinheiro Rosariammal Trust” என்ற ஒன்றை அவர் ஆரம்பித்து, ஆண்டுதோறும் 150-க்கு மேற்பட்ட முதுகலை மாணவ மாணவியர் படிப்பிற்காக ஊக்கத்தொகை வழங்கினார்.

108செவாலியர் அவர்கள் தான் பிறந்த புன்னைக்காயலில் தன் செலவில் தண்ணீர் தேக்கம் ஒன்றைக் கட்டினார். அதனை மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் M.G.R. அவர்கள் திறந்து வைத்தார்கள். வாழ்க்கையில் பொருளாதார அற்ற குடும்பங்களில் ஒளி விளக்கேற்ற ஒரே சமயத்தில் 100-க்கு மேற்பட்ட “கூட்டுத் திருமணங்களை” நடத்தியுள்ளார்.

அரசாங்கத்தினால் கிறிஸ்துவ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கும் உதவிகளின் நிரல்களைத் தொகுத்து ஒரு இலவசக் கையேடாக வெளியிட்டார். ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைக்க பல்வேறு அரசியல் தலைவர்களை அவர் நேரடியாக சந்தித்து அவர்களின் உண்மை நிலையை அவர்களுக்கு விளக்கி அவர்களுக்கு வேண்டிய சலுகையைப் பெற்றுத் தந்திருக்கிறார் இந்த ”நல்ல சமாரித்தன்”. மக்கள் பணியே மகேசன் பணி என்று வாழ்ந்தவர் இறுதியில் 20-7-1996 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

by Prof. Genesis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *