பரதவர்களின் நாட்டார் மருத்துவம் – பாகம் 2

பரதவர்களின் நாட்டார் ம்ருத்துவத்தில் இடம் பெற்றுள்ள சில மந்திர மருத்துவ முறைகளைக் காண்போம்.

புனித நீர் – புனித எண்ணெய் மருத்துவம்
தண்ணீர், எண்ணெய் ஆகியனவற்றைத் தெய்வங்கள் மற்றும் புனிதர்களின் உருவங்களுடனும் இறந்த குருக்களின் கல்லறைகளுடனும் தொடர்புபடுத்துவதன் மூலம் அவற்றிற்கு மந்திர ஆற்றல் (Magic Power) எற்படுவதாக இவர்கள் நம்புகிறார்கள். இவ்வாறு மந்திர ஆற்றல் பெற்ற தண்ணீர் , எண்ணெய் ஆகியனவற்றை நோய் தீர்க்கும் ம்ருந்தாகப் ப்யன்படுத்தும் வழக்கம் பரதவர்களிடம் உள்ளது.

கத்தோலிக்கத் தேவாலயங்களில் சில ஆலயங்கள் புண்ணியத்தலங்களாக( பசலிகா – Basilica) எற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இத்தலங்களில் உள்ள மேரியன்னை அல்லது புனிதரின் உருவத்தின் பாதங்களில் சிறிதளவு நீரை ஊற்றிக்கழுவி அதனைப்ப்டித்து வைத்து நோய்யாளிகளுக்குக் கொடுத்தால் நோய் தீரும் என்பது இவர்களிடையே நிலவும் ஒரு பரவலான நம்பிக்கையாகும்.

ஈஸ்டர் இரவில் ( புனித வெள்ளியை அடுத்து வரும் சனிக்கிழமை முடிந்து புனித ஞாயிறு பிறக்கும் நள்ளிரவில்) தூத்துக்குடியிலுள்ள பனியமாதா தேவாலயத்தில் மெழுகுதிரிகள் எற்றிவைக்கப்படும். தேவாலயத்திற்கு வரும் பக்தர்களும் வீட்டிலிருந்து மெழுகுதிரிகளையேற்றிக் கொண்டு வருவார்கள். பூசையின் ஒரு கட்டத்தில் எல்லா மெழுகுதிரிகளும் நீர் நிரம்பிய ஓர் அண்டாவில் தோய்த்து அணைக்கப்படும். இந்த அண்டாவிலுள்ள நீரானது புனித நீராகக் கருதப்படுகிறது.

ஒரு குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருவர் மாற்றி ஒருவர் நோய்வாய்ப்பட்டுக் கொண்டிருந்தால் அவர்கள் வாழும் வீட்டில் ஏதோ ஒரு குறைப்பாடு இருப்பதாக நம்புகிறார்கள். இதனைப் போக்கமேற்கூறிய புனித நீரையெடுத்து வந்து வீட்டின் உட்பகுதியில் தெளிக்கிறார்கள். சிலர் பாதிரியாரை (Parish Priest) அழைத்து வந்து சமய மந்திரங்களைக் கூறி அதனைத் தெளிக்கச் செய்கிறார்கள். இதன் முலம் குடும்பத்தினர் நோய்வாய்ப்படாமல் இருப்பார்கள் என்பது இவர்கள் நம்பிக்கையாகும்.

சிலர் தேவாலயத்தின் ஆல்டர் பகுதியில் எரியும் எண்ணெயினை எடுத்து வந்து பாட்டில்களில் பத்திரபடுத்திக் கொள்கிறார்கள். தலைவலி மற்றும் உடலில் எற்படும் வலிகளுக்கு இந்த எண்ணெயினைத் தடவினால் வலி போய்விடும் என்பது இவர்களின் நம்பிக்கையாகும். மேல் பூச்சாகமட்டுமின்றி ஒன்றிரண்டு சொட்டுக்களை உள்மருந்தாகவும் சில நேரங்களில் பயன்படுத்துவதுமுண்டு.

கி.பி 1885ல் காலமான ரொண்டோ என்ற போர்ச்சுக்கீசிய கத்தோலிக்கத் துறவியின் கல்லறை தூத்துக்குடி நகரிலுள்ள ஒர்னாலிஸ் மேல்னிலைப் பள்ளியின் எல்லைக்குள் உள்ளது. இவர் இப்பகுதியிலுள்ள பனிமயமாதா தேவாலயத்தில் பங்குக்குருவாக இருந்து இப்பகுதி மக்களிடையே மிகுந்த செல்வாக்குடையவராக விளங்கியுள்ளார். இவருடைய கல்லறைக் கல்வெட்டு கல்லறையின் மேற்புறத்தில் அமைந்துள்ளது.

கருவுற்று குறைப்பிரசவமான பெண்கள் மீண்டும் குறைப்பிரசவம் ஆகிவிடக் கூடாது ஏன்பதற்காக இக்கல்லறைக்கு வந்து கல்லறைக் கல்வெட்டுக் கல்லின்மீது நல்லெண்ணையை ஊற்றிப் பின்னர் அதனை வழித்தெடுத்து மீண்டும் பாட்டிலில் அல்லது பாத்திரத்தில் ஊற்றிக் கொள்கிறார்கள். இந்த எண்ணெயைத் தினமும் வயிற்றின் மீது தடவி வந்தால் சுகப்பிரசவம் நடைபெறும் என்பது இவர்களின் நம்பிக்கையாகும். சுகப்பிரசவம் வேண்டுமென்ற விருப்பத்தினடிப்படையில் குறைப்பிறசவத்திற்காளாகாத கருவுற்ற பெண்ளும் இதுபோல் செய்வதுமுண்டு.

புன்னைக்காயல் என்னும் கடற்கரைக் கிராம்த்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் கற்சிலுவையொன்று சிறு மண்டபத்தினுள் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது. இதனைத் திருமணச்சிலுவை என்று பரதவர்கள் அழைக்கிறார்கள். இச்சிலுவையின் உச்சியில் பால் ஊற்றி கீழெ வழியும் பாலை மீண்டும் பாத்திரத்தில் சேகரித்துக்கொள்கிறார்கள். இதனை நோய்ள்ளவர்களுக்குப் பருகுக் கொடுத்தால் நோய் குணமாகும் என்பது இவரிகளிடையே நிலவும் நம்பிக்கையாகும். பாலுக்குப் பதிலாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயினைப் பயன்படித்துவதுமுண்டு. இந்த எண்ணெயினை உடலில் தோன்றும் கட்டிகள், காயங்களின் மீதும், வலிதோன்றும் பகுதியிலும் பூசினால் குணமேற்படும் என்றும் இவர்கள் நம்புகிறார்கள்.

இதே ஊரில் 1889ல் பிறந்த ஜான்சிங்கராயர்லோபோ என்பவர் தூத்துக்குடிக் கத்தோலிக்க மறை மாவட்டத்திலுள்ள பல தேவாலயங்களில் பங்கு குருவாகப் பனி புரிந்து 13-4-1972ல் காலமானார். இவரது உடல் புன்னைக்காயலில் உள்ள புனித சவேரியார் தேவாலயத்தின் பிரதான நுழைவு வாயிலின் முற்றத்தில் தென்புறமாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது கல்லறை எதுவும் கட்டப்படாமல் கோவில் முற்றத்தின் தளத்தின் மீதே, அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கல்லறைக் கல்வெட்டு அமைந்துள்ளது.

பெரும்பாலும் செவ்வாய்க்கிழமையன்று நல்லெண்ணெய், தேங்காயொண்ணேய், பால் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றினை இக்கல்லறைக் கல்வெட்டின் மீது ஊற்றி அதனைத் துணியால் பிழிந்தெடுத்துச் சேகரித்து நோய்தீர்க்கும் உள் மருந்தகவும் வெளி மருந்தகவும் பயன்படுத்துகிறார்கள். இது எழுபதுகளில் புதிதாகத் தோன்றிய நோய் தீர்க்கும் கல்லறையாகும்.

பதினாறாம் நூற்றாண்டில் பரதவர்களிடயே சமயப்பணி புரிந்து வந்த ஹென்றிகு ஹென்றிக்ஸ் எனும் சபைத் துறவி கி.பி 1600 பிப்ரவரியில் புன்னைக்காயலில் காலமானார், அவரது உடல் தூத்துக்குடி பனிமயமாதாக் கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது. ”அவரது கல்லறைக்குக் கூட்டம் கூட்டமாக வந்து புனித அந்தோணியார் மற்றும் புனிதர்களிடம் உதவி வேண்டுதல் போல வெண்டுதல் செய்தனர். அவரது கல்லறையைச் சுற்றிலும் மெழுகுதிரிகளையேற்றினார்” என்று 1601 ஆம் ஆண்டு சேசுசபைக் கடிதம் குறிப்பிடுகிறது. [ ச இராசமாணிக்கம் 1967 :]. எனவே 17ஆம் நூற்றாண்டின் கல்லறைகளில் சென்று வேண்டுதல் செய்யும் பழக்கம் பரதவர்களிடம் தோன்றிவிட்டது எனலாம்.

புனிதர்கள் மற்றும் சமயக் குருக்கள் மூலம் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்வதாகவே இச்செயல்கள் அமைகின்றன மற்றபடி, கல்லறைகளை வழிப்படுவதாகக் கருதக்கூடாது என்று கத்தோலிக்க சமயக் குருக்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் நடைமுறையில் இக்கல்லறைகள் வழிப்பாட்டுக்குரியனவாகவும், மந்திர ஆற்றல் உடையனவாகவும் பெரும்பாலான பரதவர்களால் கருதப்ப்டுகின்றன.

பாகம் 3 விரைவில்

ஆ. சிவசுப்பிரமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *