பரதவர்களின் நாட்டார் மருத்துவம் – 5

தொத்து மந்திர சிகிச்சை ( Contagious Magic Cure)

பிறருடைய தீயபார்வையினால் உடல் நலக்குறைவு ஏற்ப்ட்டதாகக் கருதினால் அதற்குப் பின்வரும் முறையில் பரதவர்களிடம் பரிகாரம் நிகழும்.

உப்பு , மிளகாய் வற்றல் ஆகியவைகளை ஒரு துணியில் சிறு பொட்டலமாகக் கட்டிக் கொள்கிறாகள். விசுவாச மந்திரத்தைக் கூறிய வாறே அப்பொட்டலமாகக் கட்டிக் கொள்கிறார்கள். விசுவாச மந்திரத்தை கூறியவாறே அப்பொட்டலத்தால் நோயுற்றவரின் தலையிலிருந்து கால்வரை மூன்றுமுறை தடவுகிறார்கள். பின்னர் அப்பொட்டலத்தால் நோயுற்றவரின் தலையை மும்முறை சுற்றி அதனை எரியும் நெருப்பில் போடுகிறார்கள். தீய கண்பார்வயுடையவர்கள் என்று சந்தேக துக்காளானவர்கள் காலடி மண்ணில் சிறிதளவுயெடித்து வந்து உப்பு-மிளகாய் வற்றலுடன் சேர்த்து பொட்டலத்தில் கட்டுவதுமுண்டு.

இச்செயல் தீமையை மாற்றுவித்தல் (Transference of Evil) என்று பிரேசர் குறிப்பிடும் முறையைச் சார்ந்ததாகும்.

மத்திய செலபிஸிலுள்ள தேர்ரடியாஸ் என்ற மலைஜாதியினர் யாருக்காவது தோல் வீக்கம் வந்து விட்டால், ஓர் உறுதியான கம்பை எடுத்து, உடம்பில் பாதிக்கப்பட்ட இடத்தின் மீதுவைத்து அழுத்திக் கொண்டு “இதற்குள் செல்” என்று சொல்வான். இவ்வாறு செய்யும் போது அந்த வீக்கம் அவனது உடலிருந்து நீங்கி கம்புக்கு மாறிவிடுவதாக அவன் நம்புகிறான்.

இதுபோலவே நோய்ற்றவரின் உடலில் உப்பு மிளகாய் வற்றல் ஆகியவைகளைக் கொண்ட துணிப்பொட்டலத்தை உடலில் தேய்ப்பது நோய்க்குக் காரணமான தீய பார்வையினை அதில் மாற்றுவதாக அமைகிறது. துணிப் பொட்டலத்திலுள்ள உப்பின் கரிப்புத் தன்மையும் மிளகாய் வற்றலின் காரமும் அதனை வருந்துகின்றன. துணிப் பொட்டலத்தை நெருப்பில் போடுவது தீய பார்வையின் விளைவை அடியோடு எரித்து அழிப்பதாக அமைகிறது. மேலும் உப்பும் மிளகாயும் நெருப்பில் ஓசையுடன் வெடித்து அழிவதன் அடையாளமாக நம்பப்படுகிறது.

பரதவர்களும் காலடி மண்ணையெடித்து நெருப்பில் போடுவதன் மூலம் அதற்குரியவணைத் தண்டிக்கிறார்கள். இத்தகைய பழக்கம் இனக்குழு வாழ்வைக் ( Tribal life) கடந்து பல நூற்றாண்டுகள் ஆன பின்பும் பரதவைகளிடமும் தமிழகத்தில் வாழும் பல சாதியினரிடமும் இன்றும் வழக்கிலுள்ளது.

ஆ. சிவசுப்பிரமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *