பனிமய மாதா பேரில் பதிகம் – 2

தெண்டிரை நிகர்த்த புனல் மண்டக தடங்களில் செய்ய செங்கமல மலரும்
திரளும் வால் வளைகளும்
பைங்கழையும் ஈன்ற வைந்திரன் மணிகளில்
வெறிப்பச் செங்குமுதம்
இதழ் விண்டு தீந்தென் சொரிந்திடும்
சீர் பெருகு வளம மர்ந்த
திருமந்திர நகரிலெழு
அருமந்திரத்திலுறை
திவ்ய பனிமய அன்னையே!

94தண்பொழிற் காவில் அன்று
ஆதிதாய் ஏவையை;
சதிசெய; உள்ளத்தில் உன்னிச்
சர்ப்ப வடிவாய் வந்து
மாதினை
அருந்தாது தற்பரன் விலக்கு கனியைத்
தான் உண்ண மயக்கும் வெம்பேயினது
முடிதனை காலால் மிதித்து உடைத்த
சத்துவ மிகுந்த மா உத்தமி !
புகலரும் தயையுடைக் கருணை வாரி!

சண்பகச் சோலை சூழ்ந்தெழிலார்
வலம் செய நகர்தனில்
மேவும் கொள்ளை நோயைத்
தகவுடைக் கருணை கொண்டு
விலகச் செய்து
அவ்வூர் தனைக் காத்தது உலகறியுமே.

தாயே!
நின் மைந்தர் யாகம் செய் தொழிற் குறையினால் , தளர்வுற்று,
மெலிவுற்று
ஒரு தம்பமற்றவராக
வறுமை நோய் கொண்டு
ஈங்கு
தள்ளாடி அலைதல்
தகவோ?

வெண்பிறை பாத காப்பு அணியும் தகவே!
நின் பாதார விந்தமே ஆதாரமாம்.
வேறு ஓர் ஆதாரம்
நினது மகன்;
எங்கட்கு இம்மேதினியில்
வேறே ஏது அம்மணி?
வெய்ய அவ்வறுமை முதல் உறுவ வெல்லாம் நீவ!
மிருது மலர் உள மலர்ந்துன்
மென்கரத்தேந்து திருமைந்தனை இரக்கில்
இவை விலகாது
நிலை நிற்குமோ!

தெண்புனற் பனையில்
தவழ வெண் சங்கு கமலமிசை
திகழ்தரளம் ஈன்று அகலவே
சென்று அதனை
வெண்குருகு தனது கருவென
உள்ளிச் சேர்த்து அடைகிடந்து
வெறிதெ தினமும் ஏமாற
வளம் அமரும்
மாதிருவுடைச்
செந்நெல் வயல் சூழ
ஓங்கும் திருமந்திர நகரில் எழும்
அருமந்திரத்தில் உறை
திவ்ய பனிமய அன்னையே!

முப்புவனமும் தாங்கி
முத்தொழில் நடாத்தும் ஒரு மகனை
நடு முடிவிலானை,
மும் மூன்று திங்கள் உன் உதரத்தில் வைத்து
இந்த மூவுலகும் மகிழ்வு கொள்ள
மூதூரெனும் பெத்திலே நகரின் அருகில்
ஒரு முழையகத்து ஈன்று
திவ்ய முளரிதொழு செங்கரம் தாங்கும்
அருவலமதனை , மூகையாம் புகல வலரோ!

ஒப்பறும் பொழிலார் அலெக்சாந்திரியா நகரில்
உனது எழில் அடைக்கலத்தே ஒப்பித்த
தாய் மகள் இரண்டு உயிரையும்
கொல்ல உன்னும்
ஒரு நீசனு
பய ஒளிவிழி மறைத்து
உனது சரணாடுமிருவரையும்
உவமையறு கருணையுடனே
உயிர் காத்து
ரட்சித்த சரிதைதனை
அறியார் இவ்வுலகில் எவருண்டு அம்மணி!

இப்பகுதியில்
உனது அடியர்
ஏழையா நல்குரவில்
இன்னா அடைந்து
நொந்து
ஏதுமொரு தம்பமற்று
அலைவதைக் காணாது இருந்தையோ! கருணையில்லையோ!
என்னை இது தயைகொலோ!
அன்னை உனது அலர் விழிகள்
எங்கள் மேல் சிறிது நோக்க இது தகுந்த தருணம்
நின் புதல்வனைக் கெஞ்சி
எம் இன்னா ஒழித்து
அருள்வையே

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *