பனிமய மாதா பேரில் பதிகம்

இந்த கீழ் கண்ட பதிகம் யாரால் எழுத பட்டது என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் இப் பதிகம் மிக பழமையானது என்பது தெள்ளதெளிவு . இது தூத்துக்குடியில் பிறந்து சென்னையில் வாழ்ந்து இறைவன் அடி சேர்ந்த திரு அந்தொனி மோத்தா அவர்களின் பழைய செப புத்தக தொகுப்பில் காணப்பட்ட ஒன்றாகும்.
இப்பதிகத்தில் நம் முன்னோர்களின் கற்பனை வளமும் சொற் சிறப்பும் அவர்கள் பனிமய மாதா மீது கொண்ட பக்தியும் தெளிவுற தெரிவதால் இப்பதிகத்தினை இன்று பலரும் படித்து இன்புற வேண்டும் எனும் பெரும் அவாவில் இப்பதிகம் இங்கு தரப்படுகிறது. இப்பதிகம் மிக நீளமாக இருப்பதால் சிறு சிறு பாகங்களில் இது வெளிவரும். படியுங்கள் மகிழுங்கள்.

by A.X Alexander

தூத்துக்குடி

பனிமய மாதா பேரில் பதிகம்

திருமந் திரனகரில் சேணாடர் வாழ்த்தும்
அருமந் திரத்திலுறை யன்னை மரியாம்
பனிமயமா நாயகிமேல் நான்பதிகம் பாடத்
தனிமுதலே தாய் துணை நின்றாள்

தண்மதி மிதித்து
எம்பால் கருணை, யுடையாய்த் தரித்து
மீன் மெளலி புனையாய்!
தரணியில் எம் ஆதி அன்னை ஏவை புரி பாதகந்தனை நீவி
உலகமுய்ய தற்பரமன் உனது திரு அமல உதரத்தில் மனு ஜனனமாய் வந்துதிக்க
தானானவன் அவனெல்லாம்,
உளவாக்கும்! உன் உள்ளந்தன்னில் தரித்த அமுதே!

விண்மணி விளங்கும் பாரிஸ் மாநகரத்தின மேயவோர் துஷ்ட யூதன்,
விமலியுனை நிந்திக்க
மனம் வெகுளி, சகியா விடைத்தலோடு
அவனை வெட்டி
வெம்பழிக்கு ஆளான நினதடிமை உயிரை
நீ , மீள்சரிதை பொய்யல்லவே.
வெய்ய கொடு அலகை செய்யும் அல்லல் உறுநிஷ்டூர, வினையால்
எம் உளம் மெலிந்து,
கண்மழை பொழிந்து
நின் பாதம் புஜங்களே, கைக்கண்ட ஆதாரமாய்க் கருதியுனை அணுகினோம்
எமது துயர்தீர்க்க!
நின் கைத்தலத்து ஏந்து சர்வ கர்த்தவ்ய சாட்சாத் பரம் பொருளை வேண்ட!
நின் காருண்ய சித்தம் வைத்தால்
கடிதில் எம்பவ வறுமை ஒழியும்; இஃதுண்மையே!
கை விடாதருள் செய்வையே!

தெள்ளிய மழைத்தடம்!
அதனில் மேதிகள் உழக்கிட;
சினை வாளை தாவி
நெடிய தெங்கின் நற்கனிகளையுதிர்க்க!
முட்புறமா மார்ந்த, தீங்கனி கிழிந்து சிந்தும் செந்தேறல் மடை பாய்ந்து சாலியை வளர்த்திடும்!
ஆங்கு கழனி சூழ்ந்த
திருமந்திர திருநகரில்
எழு மந்திரத்திலுறை திவ்ய பனிமய அன்னையே!

அண்ட பகிரண்டமோடு பற்பல சராசரம் அனைத்தும் உளவாக்கி என்றும் ஆள்பரமதாதை தன் சேயே!
அவ்வாதி சுதனான கடவுட்கு மாயே!
அமலவொரு புறவின் வடிவாக நற்காட்சி தரு அமல இஸ்பிரித்து நேயே!

அந்தநாள் ரோமை நகர் தனையாண்ட கொடுங்கோலனான ஜூலியன் அரசனாம்,
மிண்டன் உனது அடியர் மேற் பகைகொண்டு
செய்த தீவினை கண்டு, நீயிரங்கி,
வெய்ய அத்துஷ்டனை
சிஷ்ட வொரு முனிவரம் ’மெர்க்கூரை’
விரைவில் ஏவி
வீழ்த்தி உயிர் மாய்த்து
நினது அடியாரைக் காத்த கதை வீணல்லவே!

அம்மா! இவண் வெஞ்சினக் கூளியெமை வஞ்சித்து;
உறுத்து வினை விஞ்சலால் உளம் மெலிந்து;
மண்டு புனல் போலும் விழிநீர் சோரிந்து
உன்திரு வாரி சக்கழல் கனன்றி,
வாகான வேறு ஓராதரமின்றி
யாம் மறுகி நின் சரணடைந்தோம்.
வையம் புரப்ப!
உன் துய்ய கைத்தலம் அமரும் மைந்தனோடு
எளியர்க்காய் மன்றாடில்
ஒழியும் எம் வறுமையொடு துயரெலாம்,
மறுக்காது உனதருள் பொழிவையே!

2 thoughts on “பனிமய மாதா பேரில் பதிகம்

  1. Dear Mr Alexander
    I wonder how on earth you manage to lay your hands on such treasures. May be your professional detective and inquisitive mind is always at work. (I am sure you know this is my heart felt complement.)
    Thank you
    Ragu Antony

  2. Dear Alex,
    Remeber your visit to see Marudanayagam,Nagarajan. I have read the above lines of the Pathigam and decphired to a large extent. But to make my work easier I would like to have the whole work in hard copy. I tried copying it to MSWord.The fonts don’t work. It is a very interesting poem really. We can discuss it over phone. (9940056560).
    Ragards,
    Dominic Raj

Leave a Reply to gpadmin Cancel reply

Your email address will not be published. Required fields are marked *