பேராசிரியர் வளன் அரசு
முன்னுரை:
திருமந்திர நகராம் தூத்துக்குடியில் மரிய பூரணம் – மரியம்மாள் ஆகியோரின் அருமருந்தன்ன மகனாக 14.10.1917 அன்று பிறந்த ரம்போலா அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழில் முதுகலைப்பட்டம் பெற்று தமது இருபத்தாறு அகவையில் திருச்சிராப்பள்ளித் தூய வளனார் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியரானார். முப்பத்தாறு ஆண்டுகள் தமிழ்த்துறைத் தலைவராகத் திகழ்ந்த பேராசிரியர் அவர்கள் திருச்சிராப்பள்ளித் தமிழ்சங்க அமைச்சர் ஆகவும் தமிழகப் புலவர்குழு உறுப்பினர் ஆகவும் சமய நல்லிணக்கச் சான்றோனாகவும் எழுத்தாலும் பேச்சாலும் விழுமிய தமிழ்ப்பணி ஆற்றிய மாமணியாகவும் மிளிர்ந்தார். தவத்திரு. குன்றக்குடி அடிகளாரால் ‘பெரும்புலவர்’ எனவும், உலகத் கிறித்தவத் தமிழ்ப் பேரவையால் ‘தமிழ் மாமணி’ எனவும் விருது வழங்கிப் பாராட்டப் பெற்ற பெருமை பொருந்தியவர் ஆவார்.
எழுதிய விழுமிய நூல்கள் :
மூச்சாலும் பேச்சாலும் தமிழ் தழைத்தினிதோங்கிட விழைந்து உழைத்த பேராசிரியர் ரம்போலோ ஆராய்ச்சிக் கட்டுரைகள், வீரமாமுனிவர். தேம்பாவணி வசனம், பதினெண் கீழ்க்கணக்கு விளக்கம். கிறித்தவப் புலவர்கள், தமிழ்த் தொண்டர்கள், கிறித்தவ தமிழ் தொண்டர்கள், தமிழ்ச் சான்றோர், இலக்கிய பொழில், இனிய கனிகள் ஆகிய பத்து நூல்களைப் பாங்குடன் எழுதிப் பலராலும் போற்றிப் பாராட்டப்பட்டுள்ளார். எல்லோரும் புரிந்து கொள்ளும் எளிய நடையும் தெளிந்த சிந்தனையும் பேராசிரியரின் திருமறை உணர்வையும் தீந்தமிழ்ப் பற்றையும் புலப்படுத்துகின்றன. என்றி முதல் ஆயர் ரோச்சு வரை முப்பத்தெட்டுப் பெருமக்களைக் குறித்து எழுதப்பட்ட கிறித்தவத் தமிழ்த் தொண்டர்கள் என்னும் நூல் திருச்சிராப்பள்ளித் தமிழ் இலக்கியக் கழக வெளியீடாகும். முனைவர் கா.மீனாட்சி சுந்தரம் கூறுவது போன்று. ‘‘கிறித்தவ மதத்தைச் சார்ந்த வெளிநாட்டு அறிஞர்கள் ஆற்றிய அரும்பணி மேலோங்கி நிற்கிறது. அவர்கள் தொடாத பொருளில்லை. தொட்டவை ஒளிவீசின – நுழைந்தவை நுண்ணறிவை நல்கின, சமயம், மருத்துவம், வரலாறு, இலக்கியம், இலக்கணம், நிலநூல், விஞ்ஞானம் இன்னபிற துறைகளில் அவர்கள் புகுந்து பல புதுமைகளை உரைநடைகளில் எழுதிக் காட்டி விட்டனர்’’ செய்திகளை அரிதின் முயன்று தேடித் திரட்டி, முந்நூற்று மூன்று பக்க அளவில் நூலை நல்கியிருப்பது பெருமிதம் தருவதாகும்.
தலைமைப் பண்பு :
பேராசிரியர் ரம்போலா அவர்கள் தலைமையில் திருச்சிராப்பள்ளித் தூய வளனார் கல்லூரித் தமிழ்த்துறையில் ஓராண்டு (1960-61) உரையாளராகப் பணியாற்றும் பேறு பெற்றேன். உடன் பணியாற்றுவோருக்கு ஒல்லும் வகையெல்லாம் உறுதுணை புரிந்து ‘‘பணிவிடை பெறுவதற்கு அன்று. பணிவிடை புரிவதற்காக’’ என்னும் நற்செய்திக்குசச் சான்றாகப் பேராசிரியர் பணி புரிந்தார். எட்டு ஆண்டுகள் தூய வளனார் கல்லூரி முன்னாள் மாணவ மன்றச் செயலாளராகத் தொண்டாற்றியுள்ளார். திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கச் செயலாண்மைப் பொறுப்பினைப் பெரியசாமி அவர்களுடன் இணைந்து பல்லாண்டுகளாக நல்லத்தமிழ்ப் பணியாற்றும் இயற்றமிழ் எழுச்சி ஏந்தலாக விளங்கினார். கிறித்தவத் திருமறைத் தொண்டராகவும் வின்செந்தியன் அமைப்பின் தலைவராகவும் ஏழை எளியோருக்கு உதவும் உயரிய பண்பாளராகவும் பேராசிரியர் அயராது செயலாற்றினார். குமரி மாவட்டத்தில் மணக்குடவர் தோன்றிய மணக்குடிக்கு என்னை அழைத்துச் சென்று வீரமாமுனிவரின் விழுமிய காப்பியமான தேம்பாவணி மாநாட்டில் (1961) என்னை மேடைப் பேச்சாளர் ஆக்கினர். தம்மிடம் பயிலும் மாணவர்க்கும் தமிழ் சங்கத்திற்கு வருகைதரும் இளையோருக்கு கலைபயில் தெளிவும் கட்டுரை வன்மையும் வாய்ந்த விழுமிய தலைவராக அமைந்து வழிகாட்டும் ஒளிவிளக்காக மிளிர்ந்தார். காவல்துறைத் தலைமை இயக்குநர் அலெக்சாண்டர் போன்றோரை உருவாக்கிய பெருமைக்குரியவர் பேராசிரியர். செய்தியாளர் இராமகிருட்டிணன் இலக்கியப் பேச்சாளர் ஆவதற்குத் துணையும் தூண்டுதலும் புரிந்தவர் பேராசிரியர். கோவையாகத் தாம் எழுதிய பாடல்களைத் தொகுத்து வெளியிட்ட போது உவமைக் கவிஞர் சுரதா வழங்கிய பாராட்டுப் பாமலை குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்ததாகும்.
‘‘நாட்டின் விடுதலையை – நிலை
நாட்டிட ரம்போலா தீட்டிய பாட்டுக்கள்
கோட்டைக் கதவுகளாம் – புகழ்
கொண்ட விருத்தங்கள் சந்தச் சிலம்புகள்
ஏட்டில் படுத்திருக்கும் – தமிழ்
எண்ணங்கள் பண்பட்ட வண்ணங்க ளாம்இவை
ஊட்டும் பிறந்திடும்! தூக்கம் பறந்திடும்!’’
தாகூர் கல்லூரி முதல்வர் முனைவர் தி. இராசகோபாலன் போன்ற பேச்சாளர் பலரை உருவாக்கிய பெருமையும் பேராசிரியர் ரம்போலாவைச் சாரும்.
மனித நேயம் பேணும் இனியவர் :
பேராசிரியர் ரம்போலா தமிழ் இலக்கிய அமைப்புகள் பலவற்றுடன் தொடர்பு கொண்டு பல்வேறு நிலைகளில் பணியாற்றித் தமிழுக்கு அணிகள் பல உருவாக்கியுள்ளார். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் போன்ற சான்றோர் பலரை மதித்துப் போற்றிப் பழகிய பாங்குடைய பேராசிரியர் ‘‘பெரியாரைத் துணைக் கோடல்’’ என்று திருவள்ளுவர் கூறியவாறே, வாழ்ந்து காட்டியவர். தம் தந்தை பாவலர் மரிய பூரணம் போன்று பாட்டாலும் உரையாலும் பெரும்புகழ் ஈட்டியவர். நல்ல மைந்தனாகவும் சிறந்த கணவனாகவும் விழுமிய தந்தையாகவும் கெழுமிய தாத்தாவாகவும் திகழ்ந்தவர். மயிலாடுதுறை நீதிபதி வேதநாயகர் முதல் இத்தாலியத் தமிழறிஞர் வீரமாமுனிவர் வரை கிறித்தவர் தமிழ்ச் சான்றோரைப் பின்பற்றி மனித நேயம் மிக்க இனிய பேராசிரியராகப் பல்லாற்றானும் பணியாற்றியவர்.
நிறைவுரை :
கிறித்துவத் திருமறைக்கும் வித்தகத் தமிழ்த் துறைக்கும் நினைந்தும் முனைந்தும் பேராசிரியர் ரம்போலா ஆற்றிய பணிகள் பலவாகும். விவிலியத் திருநூலையும் வள்ளுவப் பெருநூலையும் எப்போதும் போற்றி அவற்றின் கோட்பாட்டுக்கு ஏற்பத் தொடர்ந்து தொண்டாற்றியவர். சமய இலக்கியங்களை மாணவர்க்கு எடுத்துக் கூறும்போது, அவற்றின் நுட்ப திட்பங்களை எல்லோரும் ஏற்றுப் போற்றும் அளவில் வழங்கி மகிழ்வார். கல்லூரியில் பாடம் நடத்தும் போதும் விழா மேடைகளில் தமிழ் இலக்கிய இன்பத்தை வாரி வழங்கும் போதும் பேராசிரியரின் வெண்கலக்குரல் செவி மடுக்கும் மாந்தர் அனைவரையும் கவர்ந்து, ‘‘கேட்டார்ப் பிணிக்கும் தகைவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்’’ என்னும் திருக்குறளுக்குச் சான்றாகத் தோன்றும். பழகுவதற்கு இனியவராகவும் ‘‘பணியுமாம் என்றும் பெருமை’’ என்னும் திருக்குறள் தொடருக்கும் உரியவராகவும் வாழ்ந்து காட்டியவர் பேராசிரியர் ரம்போலா. தமிழிலக்கியப் பரப்பை விரிவாகத் தெரிந்துகொண்டு இலக்கியம் வாயிலாகவே மக்களுக்கு வாழ்வியல் நீதி நெறிமுறைகளைத் தொடர்ந்து தெளிவுறுத்தி வந்தார். இறைப்பற்று, மொழிபற்று, நாட்டுப்பற்று ஆகிய மூன்றும் பேராசிரியரின் பேச்சிலும், எழுத்திலும், மூச்சிலும், வாழ்விலும் ஒளியுடன் மிளிர்ந்ததை அறிஞர் பெருமக்கள் பாராட்டிப் போற்றியுள்ளனர். காட்சிக்கு எளியவராகவும் கடுஞ்சொல் அற்றவராகவும் மாட்சிக்கு உரியவராகவும் தோன்றிய பேராசிரியர் ரம்போலா தமிழ் கூறும் நல்லுலகம் எண்ணி இறும்பூது எய்தும் தமிழ்ச் சான்றோன் ஆகத் திகழ்கிறார்.