நன்கு அறியப் பெறாத ஒரு மாபெரும் கிறிஸ்தவப் பாவலர்

நம் நாட்டில் கீழைக்கடலோரத்தின் திலகமாகத் திகழ்வது தூத்துக்குடி. முத்துக்குளித்துறையில் முதன்மையான துறைமுகப்பட்டினம் இதுவே. தென்னகத்தின் திறவுகோல் என்று வரலாற்று ஆசிரியர்களால் எடுத்து மொழியப் பெற்ற வணிகம் வளம் படைத்த பொன்னகர் இந்நகரே. ஆதியில் கொற்கையும் மணப்பாடும் மதுரையும் பரத மரபினரின் அரசிருக்கையும் தலைநகருமாயிருந்தன என்று வரலாறும் கூறும். இந்த இனத்தார் கிறிஸ்தவம் தழுவிய பின்னால் தூத்துக்குடியின் இவர்தம் அரசிருக்கையும் தலைநகரும் ஆயிற்று. தூத்துக்குடியின் பழைய பெயர் தூற்றுக்குடி. அதாவது வெட்டின ஊற்றைத் தூர்த்து வேறொரு ஊற்று வெட்டித் தண்ணீர் குடித்துக் குடியிருக்கும் குடிகளைக் கொண்ட ஊர். ஆங்கிலேயர் தொடர்பினால் ட்யூட்டிக்கொரின் (Tuticorin) ஆயிற்று. இந்த ஊருக்குப் புராணப் பெயர் திருமந்திர நகர். திரு மந்திர நகர் புராணம் என்று இருப்பதாகச் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்த மந்திரநகரே அந்தோனிக்குட்டி அண்ணாவியார் என்னும் நன்கு அறியப் பெறாத ஒரு மாபெரும் கிறிஸ்தவத் தமிழ்ப் பாவலருடன் முந்திய உறவுரிமையுடையது.

நம் நாட்டில் கிறிஸ்தவ அறிஞர்களால் தமிழ் மொழிக்கு உண்டான பலப்பல நலங்களை வகைப்படுத்திக் கூறும் நூல் மயிலை திரு சீனி வேங்கடசாமியவர்கள் இயற்றித் தந்த “கிறிஸ்தவமும் தமிழும்” என்பதாகும். இந்த நூலில் தமிழ்ப் புலமை வாய்ந்த சுதேச கிறிஸ்தவர்கள் என்ற அதிகாரத்தில் முதலிடம் பெறுபவர் அந்தோனிக்குட்டி அண்ணாவியார். பாவலர் அண்ணாவியார் அவர்களைப்பற்றி வேங்கடசாமி அவர்கள் குறித்துள்ளது வருமாறு:
திருநெல்வேலி ஜில்லா மணப்பாறையில் பிறந்தவர். பேர் பெற்ற வீரமாமுனிவர் காலத்திலிருந்தவர். சிறந்த தமிழ்ப் புலவர் இவர் இயேசுநாதர் மீது பல பாடல்களைப் பாடியிருக்கிறார். இப்பாடல்கள் அனைத்தும் ஒன்று திரட்டி யாழ்ப்பாணத்தில் அச்சிடப்பட்டிருக்கின்றன.

ஆசிரியர் வேங்கடசாமி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணப்பாடு என்ற ஊரை மணப்பாறை என மாறுகொளக் கூறுகிறார் என்று நாம் தெரிந்துகொள்ளக்கூடும். மணப்பாறை திருச்சிமாவட்டத்தைச் சார்ந்தது. திருநெல்வேலிச் சீமையில் மணப்பாறை என்ற பெயருடைய ஊரைப்பற்றிக் கேள்விப்பட்டதில்லை.

செவிவழிச் செய்தியாக ஒரு கதை உண்டு. அதன்படி அண்ணாவியாரின் பிறப்பிடம் மணப்பாடு என்று சொல்வதற்கில்லை. தூத்துக்குடிக்குத்தான் அந்த வாய்ப்பு ஏற்படுகிறது. தூத்துக்குடியிலிருந்து வந்தே அண்ணாவியார் வீரமாமுனிவரைக் கண்டதாகவும் இருவருக்கும் உரையாடல் நிகழ்ந்ததாகவும் அக்கதை தெரிவிக்கின்றது நான் என் தந்தையாரிடமிருந்து அண்ணாவியார் தொடர்பாக கேட்டறிந்த இரு சம்பவங்கள்.

1. குளிக்க வந்திருந்த ஒரு வேதியர் ஆற்றங்கரையில் வேதம் ஓதிக்கொண்டும் வேட்டியைத் துவைத்துக் கொண்டும் இருந்தார். அப்போது அந்தப் பக்கமாய் அண்ணாவியார் வர நேர்ந்தது. அண்ணாவியார் மது அருந்தும் இயல்பினர் என்பது அந்தணர்க்குத் தெரிந்திருந்தது. எனவே அவர் வேண்டுமென்றே நையாண்டியாக “அத்தோனிக்குட்டி அண்ணாவி கள்ளோ வருகிறார்?” என்று சிரித்துக்கொண்டே வினவினார். அண்ணாவியார் அவருக்கு மாற்றம் விடுக்கும் முகமாக அந்தணன் “கள்” பயனை மனத்துள் கொண்டு வினாக்கள் மேல் வினாக்கள் எழுப்பினர்.
வேதங் கள்ளோ ஓதுகிறீர்?
வேட்டி கள்ளோ துவைக்கிறீர்?
பாதங் கள்ளோ பூசுகிறீர்?
பார்ப்பார் கள்ளோ நிற்கிறீர்?
அந்தணர் பதில் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்தனர். கவியின் சுவையான பேச்சின் நயத்தில் தம்மை மறந்து நகைத்து மகிழ்ந்தனர்.

2. ஒருவர் அந்தோனிக்குட்டி அண்ணாவியார் வருவதைப் பார்த்து அவரை அவமதிக்கும் எண்ணமாக “அந்தோனிக்குட்டி அண்ணாவி அதோ வருகிறது” என்றாராம். இந்த அவமரியாதை புலவருக்குப் பொறுக்கவில்லை. சொன்னவர் பெயரையே எழுத்தெழுத்தாகப் பிரித்துச் சொல்லித்தம் சினந் தீர்த்துக் கொண்டார். அன்னார் பெயர் சீனிவாசன். அண்ணாவியார் அவரைப் பார்த்து “சீ, நீ, வா, சா” என்று இழித்துரைத்துப் பழி தீர்த்துக் கொண்டராம். அண்ணாவியாரின் பாக்களை ஒரு சிறிது கற்றவர்களும் படித்துப் புரிந்து பாடிப் பயன்பெறலாம். ஆழ்ந்த புலமையாளரும் அவர் தம் பா நலத்தில் தோய்ந்து சுவை நலம் பெறலாம். ஒரு சில பாக்களில் முற்பகுதி ஒரு திறத்தார்க்கும் பிற்பகுதி மறு திறந்தார்க்கும் ஏற்றவை. பிற்பகுதியின் அமைப்பு புலவர் ஆய்வுக்கு விருந்தளிக்கும் பான்மையது. ஒரே பாட்டில் உள்ள முற்பகுதி விற்பகுதிகளுக்கு இடையேயுள்ள வேறுபாட்டை ஓர் எடுத்துக்காட்டால் காண்போம்.

எளிதான முற்பகுதி:-
தந்தையார் பிறந்தார் பெற்றதாய் இறந்தார்
சகோதரர் ஆயினோர் இறந்தார்
சகலரும் இறந்தார் நாலுமிங் திறக்கத்
தக்க நாள் நாளையோ இன்றே
எந்த நாள் அறியேன் ஆயினும் அடியேன்
இறக்கும் நாள் ஒன்றுள தென்பால்
எனக்கு தான் அழவோ அவர்க்கு நான் அழவோ
என் செய்வேன் எளியனுக் கிரங்காய்.
புலவருக்கு விருந்தாம் பிற்பகுதி:
கொந்துவா மலரின் வண்டுபாண் முரவக்
குரக்கினம் விரற்கையால் வருக்கைக்
குடக்கனி பிதிர்த்துக் குறுஞ்சுகளை எடுத்துக்
குட்டிகள் அருந்திடக் கொடுக்கும்
அந்தமா நபரை வந்தகா ரணனே
அனைத்தையும் படைத்தவா ரணனே
அளவிலா தவனே பரமபூ ரணனே
ஆதியே யேசுநா யகனே!

[கொந்து–கொத்து, கூட்டம்; பாண்முரல்–பாட்டு இசைக்க; குரக்கினம்-குரங்கினம்; வருகை-பலர்; குடக்கனி-குடம் போன்ற பலாக்கனி; ஆரணன்-வேத முதல்வன்.]

தூத்துக்குடிக் கரை துறைகளில் அண்ணாவி என்ற சொல் ஆசிரியரைக் குறிப்பிடும் கிராமியச் சொல்லாக இருந்து வருகின்றது. சின்ன அண்ணாவியார், குட்டி அண்ணாவியார் என்ற தொடர்களும் இன்னமும் வழக்கில் உண்டு. அந்தோனிக்குட்டி அண்ணாவியார் தொழிலால் ஆசிரியர் என்பது உறுதியில்லை. இவரது கவிதைகளில் இவரது ஊர், இனம், குடும்பநிலை, தொழில்துறை இவை பற்றிய சான்றுகள் கிடையா:
மக்களும் வேண்டாம் மனைவியும் வேண்டாம்
வாழ்வொடு செல்வமும் வேண்டாம்
மாடமும் வேண்டாம் கூடமும் வேண்டாம்
மன்னவர் வரிசையும் வேண்டாம்.
என்று பாடும் பக்குவம் பெற்ற புலவர் பெருமானுக்குத் தம் ஊரும் பேரும் குலமும் தொழிலும் பற்றிய கவலை இல்லாதிருப்பது இசைந்ததே.
இவர் தம் பெயர் சார்ந்த புனித அந்தோனியாரிடத்தில் நிறைந்த பக்தி உள்ளவர் இவரியற்றிய பேரின்பக் காதல் என்னும் பிரபந்தத்தின் காப்புச் செய்யுள் அந்தோனியாரின் திருவடித் துணை நாடிப் பாடப்பெற்றதே:
“கொற்றமா மகுடஞ் சூடும்
கோமன் கோத்ரக் கன்னி
பெற்றபா லகருக் காங்கோர்
பேரின்பக் காதல் பாட
கற்றவா கமத்தைக் கல்லாக்
கருங்கடல் மீனுக் கோதச்
சுற்றுளோர் வியக்குஞ் சந்தந்
தோனிதாள் துணைகொள் வாமே!

பாரதியார் எமக்குத் தொழில் கவிதை என்ற பாங்கில் தமது வாழ்க்கையைக் கவிதைப் பணிக்கு அர்ப்பணித்திருந்தார். அந்தோனிக்குட்டி அண்ணாவியாரும் அத்தகைய நிவேதன வாழ்க்கையையே விரும்பி ஏற்றார். “நின்மறைப் பொருளைப் பாடவும் படிக்கவும் வேண்டும்” என்று யேசுபிரானை நோக்கித் தம் தீராத ஆசையைத் தெரிவித்தார்:
தக்கவுன் கமலச் சரணினை வேண்டும்
சந்ததம் உனைத் தொழ வேண்டும்
தவஞ்செயப் பலமும் சக்தியும் வேண்டும்
சகல பாவங்களைத் தள்ளப்
பக்குவம் வேண்டும் நின்மறைப் பொருளைப்
பாடவும் படிக்கவும் வேண்டும்
பரகதி வேண்டும் மரியநா யகிகைப்
பாலனே யேசுநா யகனே.
அண்ணவியார் யேசு இரட்சகர்மீது இயற்றிய பாடல் திரட்டிற்கு “கிறிஸ்தவ சங்கீதம்” எனப் பெயரிடப்பட்டிருக்கின்றது. இந்தத் திரட்டில் பாலத்தியானம். பச்சாத்தாபம், தன்மேல் குற்றம் சுமத்தல், ஆசைப் பத்து, அருள் வாசகம், ஆனந்த மஞ்சரி, திருப்புகழ் முதலியன அடங்கியிருக்கின்றன. இந்தப் பாக்களைப் பாடுங்கால் மாணிக்கவாசகர், தாயுமானவர், இராமலிங்கர், அருணகிரிநாதர் முதலிய பாவலர்களுடைய கவிதைகள் சந்த இனிமை தொனிக்கக் கேட்போம். இவர்தம் கவிதைகளின் கனிவையும் கருத்துச் செறிவையும் ஒரு சேரக் கண்டோம்:
வேடத்தால் தர்ப்பணத்தால்
வெண்ணீற்றால் எக்கியத்தால்
தேடத்தான் கிட்டாத
தேவ தரிசனத்தான்
ஆறெழுத்தாய் நாலெழுத்தாய்
ஐந்தெழுத்தாய் மூன்றெழூத்தாய் வேறேழுத் தால் ஓதும்
விதிக்குள் அடங்காதான்.
இத்தகு விழுமிய கருத்துக்களைக் கொண்ட கண்ணிகள் பல அண்ணாவியார் பாடல் திரட்டில் உள. “வாக்கிற் கருணகிரி” என்பது எவ்வாறு பொருந்துமோ அவ்வாறே “வாக்கிற் கந்தோனி” என்பதும் நன்கு அமையும் என்பதை இவருடைய திருப்புகழ், ஆனந்த மஞ்ரி முதலிய பாடல்களைக் கொண்டு உறுதியாக உரைக்கலாம்.

அண்ணாவியார் ஒரு காலத்தில் ஒழுக்கவழி விலகியிருந்தனர். குருக்கன் இவரைத் தம் இனத்தால் விலக்கி வைத்திருந்தனர். இவர் ஓர் அற்புத முறையால் தம் இழுக்குடை நடையைத் திருத்திக்கொண்டார். மீந்த தம் வாணாளை இறைவனைப் பாடும் பணியில் கழித்தனர். திருந்திய தவஞானச் செல்வராய்த் திகழ்ந்தனர். தேவமாதாவிடம் “மைந்தனைத் தரும்படி கேட்டல்” என்னும் தலைப்பிலே இவர் பாடியுள்ளார். இவர் இங்ஙனம் பாடும் கீர்த்தனையின் ஒரு பகுதி இவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பத்தை வலியுறுத்துவது போல் வந்தமைகின்றது:
தரத் தயை செய்வாய் – தரத் தயை செய்வாய்
தரத் தயை செய்வாய்
இரக்கமுள்ள மாதாவே – இராசகுல கன்னிகையே
எங்கள் பேரிலுள்ள அன்பினால் உமது
செங்கை மேவுதிரு மைந்தனாரை இங்கு (தரத்தயை)

ஞான சொரூபியான நல்ல மகவைப் பாவ
ஈனந்தொட வொண்ணாததென் றெண்ணுகிறீரே தாயே
ஏனை உயிருங் காக்கும் ஞானக் குழந்தையின் நல்
இரக்கப் புலனில் நன்றாய்க் குளித்து முழுகிப் பாவ
அழுக்கைத் துடைத்து மகா ஒழுக்கத்துடனே வந்தேன்.

ரம்போலா மஸ்கரேனாஸ் எம்.ஏ. தமிழ்த்துறைத் தலைவர்
(புனித சூசையப்பர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 2)

ஞானத்தூதன் – ஜீலை 1969

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *