சிற்பக் கலைஞர் – வேம்பார் அமலநாதன்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேம்பார் என்ற கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் அமலநாதன். தற்போது தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் வசித்து வரும் அவர், தனது வீட்டையே கலைக் கூடமாக மாற்றியுள்ளார். 15 வயதில் சொருபங்களைச் செய்யும் பணியைத் தொடங்கிய அமலநாதன் கடந்த 52 ஆண்டுகளில் மேரிமாதா, ஏசுநாதர், புனித அந்தோனியார், அன்னைதெரசா மற்றும் கிறிஸ்துமஸ் குடில் சொருபங்கள் என சுமார் 1 லட்சம் சொருபங்களை உருவாக்கியுள்ளார்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, இராமநாதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் பக்தர்களுக்கு அருள்மழை பொழிந்து கொண்டிருக்கும் திருச்சொருபங்கள் இவரது கைவண்ணத்தில் உருவானவைதாம். இவை மட்டுமின்றி மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள பெரும்பாலான தேவாலயங்களிலேயும் இவர் வடித்த சொருபங்கள் காட்சியளிக்கின்றன.

அதைவிட, இலங்கையில் உள்ள பல புகழ் பெற்ற கத்தோலிக்க தேவாலயங்களில் இருப்பவை அமலநாதனின் கலை நயத்தை உலகளவில் பறைசாற்றிக் கொண்டிருகின்றன. கிறிஸ்துமஸ் குடில் சொருபங்கள் தொடர்பாக ஒரு காலை பொழுதில் அமலநாதனை, அவரது இல்லத்தில் சந்தித்த போது 15 ஆம் வயதில் சொருபங்கள் செய்யத் தொடங்கினேன் என நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

‘‘எனக்கு சொந்த ஊர் வேம்பார். கடற்கரை கிராமம் அங்குள்ள பள்ளியில் 8-ம்
வகுப்பு வரை படித்தேன். அதற்கு மேல் படிக்க வசதி இல்லை. படிக்கும் போதே ஓவியம் வரைவேன். இதனை அறிந்த எங்கள் ஊரில் பங்குத் தந்தையாக இருந்த அலங்காரம் அடிகளார், என்னை சொருபங்கள் செய்ய படிக்கிறாயா? என்று கேட்டார். நானும் ‘‘சரி’’ என்றேன். தூத்துக்குடியை சேர்ந்த பரதேசி பர்னாண்டோ என்பவரிடம் ஓராண்டு மட்டும் சொருபங்கள் செய்யக் கற்று கொண்டேன். அதற்கு பிறகு நானே சொருபங்களைத் தயாரிக்கத் தொடங்கினேன்.

எனது உறவினர்கள் இலங்கையில் இருந்ததால், நானும் 13-ஆம் வயதில் இலங்கைக்குச் சென்றேன். அங்கு சென்ற பின்பும் சொருபங்கள் செய்யும் வேலையைத் தொடர்ந்தேன். இலங்கையில் 20 ஆண்டுகள் இருந்தேன். அங்குள்ள பல தேவாலயங்களில் நான் வடித்த சொருபங்கள் இன்றும் இருக்கின்றன. அதன் பின்னர் தூத்துக்குடி வந்து, முத்தம்மாள் காலனியில் உள்ள எனது வீட்டில் வைத்து சொருபங்களைச் செய்து கொடுத்து வருகிறேன்.

தமிழகத்தில் திருச்சி மதுரை, இராமநாதபுரம், கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிமெண்டிலான சொருபங்களை வடிவமைத்து கொடுத்துள்ளேன். அதிகப்பட்சமாக 16 அடி உயரம் கொண்ட ஏசுநாதர் சொருபத்தை தங்கச்சிமடத்தில் உள்ள தேவாலயத்தில் உருவாக்கி கொடுத்தேன்.

ஆண்டுக்கு சராசரியாக 100 பெரிய சொருபங்களை உருவாக்கிவிடுவேன். அதாவது கடந்த 52 ஆண்டுகளில் சுமார் 5,000 பெரிய சொருபங்களைத் தயாரித்துள்ளேன். அதுபோன்று ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடில் சொருபங்கள் தயாரிப்பேன். ஆண்டுக்கு சுமார் 100 செட் குடில் சொருபங்கள் உருவாக்குவேன். ஒவ்வொரு செட்டிலும் 20 சொருபங்களாவது இருக்கும். அவ்வாறு உருவாக்கப்படும் கிறிஸ்துமஸ் குடில் சொருபங்களை மட்டும் இதுவரை 1 லட்சம் உருவாக்கியுள்ளேன்.

கடந்த ஆண்டு கூட இலங்கைக்குச் சென்று கொழும்பில் உள்ள புனிய லூசியா ஆலயத்தில் 12 அடி உயரம் கொண்ட புனித லூசியா சொருபத்தை வடிவமைத்துக் கொடுத்தேன். கொழும்பு கொச்சிகடையில் உள்ள புகழ்பெற்ற அந்தோனியார் சொரூபத்தை நான்தான் வடிவமைத்து கொடுத்தேன். அதுபோன்று, கொட்டைனா என்ற இடத்தில் உள்ள தேவாலயத்தில் மலைக் குகையில் ஏசுநாதர் தியானம் செய்வது போன்ற சொருபம், கொரைனா என்ற இடத்தில் உள்ள புனித மார்ட்டின் சொருபம் எனப் பட்டியலிட்டு கொண்டே போகலாம்.

நான் செய்த சொருபங்களை இந்தியா, இலங்கை தவிர வெளிநாடுகளுக்கும் கொண்டு சென்றுள்ளனர்.

என்னிடம் பணியாற்றிய பலர் தற்போது இலங்கையிலும், தூத்துக்குடியிலும் சொருபங்களைச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் மட்டும் 15 கலைஞர்களை நான் உருவாக்கியுள்ளேன். அதுபோன்று தூத்துக்குடியிலும் சுமார் 10 பேர் இன்று சொருபம் செய்யும் பணியைச் செய்து வருகின்றனர்.

கடவுள் எனக்கு கொடுத்தது இரண்டு கலைகள். ஒன்று சொருபம் செய்வது. மற்றது ஓவியம் வரைவது. இதுவரை ஓவியத்தில் அதிகக் கவனம் செலுத்தவில்லை. கடந்த சில ஆண்டுகளாக 10 ஓவியங்களை வரைந்து வைத்துள்ளேன். இன்னும் பல ஓவியங்களை வரைந்து, கண்காட்சியை நடத்த வேண்டும் என்பது தான் எனது விருப்பம்’’ என முடித்தார் அமலநாதன்.

ரெ. ஜாய்சன்
நன்றி : தினமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *