Tag Archives: villages

பஞ்சல்

panjal-seaகடந்த காலம் என்னும் எல்லையில்லா பெருவெளியில் காலத் தச்சன் கட்டியுள்ள அனுபவம் என்னும் மாபெரும் கோபுரமே வரலாறு பரணி பாயும் தரணியாம் நெல்லை மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருக்கும் ஒரு குக்கிராமமே பஞ்சல் கி.பி பதிநான்காம் நூற்றாண்டில் நாலாயிரம் வீடுகளை கொண்டு பேரூராக விளங்கிய இக்கிராமம் தற்போது விரல் விட்டு என்னும் அளவிற்கு வீடுகளை கொண்டுள்ளது. (3999 வீடுகளை கொண்டு பின் நாலாயிரமாக கட்டப்பட்ட அம்மன் கோவில் இதற்கு ஒரு சான்று. தற்போது இந்த கோவில் நாலாயிரத்து அம்மன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் பஞ்சலில் இருந்து வடக்கில் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது). கி.பி 1715-ல் சங்கயத்தான்ரொட்ரீகஸ் என்பவரால் தூய இஞ்ஞிசியாருக்கு சிற்றாலயம் ஒன்று எழுப்பப்பட்டது.

சங்ககாலத்தில் வெவ்வேறு இனத்தவர் இங்கு வாழ்ந்தனர் என்றும் இவர்கள் இந்து முறையை பின்பற்றினர் என்றும் வரலாறு கூறுகிறது. இவர்கள் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலை தங்களது முக்கியத் தொழிலாக கொண்டு வாழ்ந்தனர் என்றும் அறியப்படுகிறது. நாலாயிரம் வீடுகளை கொண்டு செழிப்புற்று விளங்கிய இக்கிராமம் எதனால் கலையிழந்து காட்சியளிக்கிறது என்ற வினாவிற்கு விடைதேடி சென்றேன் பஞ்சல் கிராமத்திற்கு. இது பெருமணலை தலைமை பாங்காகக் கொண்டு பெருமணலிளிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு உள்ளவர்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பஞ்சம், வெள்ள பெருக்கு, நெருப்பினால் ஏற்பட்ட அழிவு, அரசாங்கத்தின் நெருக்கடி, கொள்ளை, நோய், பொருளாதார பற்றாக்குறைவு மற்றும் ஒரு பெண்ணின் சாபம் அதாவது பஞ்சல் கிராமத்திற்கு பொருட்களை விற்கும் ஒரு பெண்மணி சென்றுள்ளார். panjal-ruinsஅங்கு வாழ்ந்த வேற்று இனத்தவ ஆண்களுள் சிலர் அப்பெண்மணியை மோசம் செய்துள்ளனர். எனவே அப்பெண்மணி பஞ்சலில் அமைந்துள்ள சவேரியார் கிணற்று முன் நின்று இக்குடிசைக் கோவிலை நோக்கி இவ்வுர் வறண்ட பூமியாக வேண்டும் இவ்வுரில் ஏழு தலைமுறைக்கு மேல் நிலைக்க கூடாது என்றும் சாபம் விட்டாள். எனவே தான் இவ்வுர் இவ்வாறு கலையிழந்து காணப்படுகிறது என்பது சிலரின் கருத்தாக தெரிகிறது. எனினும் உண்மை நிலை என்னவென்று எவருக்கும் தெரியவில்லை. இவை அனைத்தும் இவ்வுர் கலையிழந்து காணப்படுவதற்கான காரணங்கள் என வாய்மொழி மரபாக கூறப்படுகிறது

கி.பி 1542-ல் சவேரியார் கடல் வழியாக (பெருமணலுக்கு) வருகை புரிந்துள்ளார். இவரே பெருமணலில் வாழ்ந்த மக்களுக்கு கிறிஸ்துவத்தை எடுத்துரைத்து அவர்களுக்கு திருமுழுக்கு கொடுத்துள்ளார் என்று பெருமணல் வரலாறு கூறுகிறது. சவேரியார் தமது முதல் வருகையின் போது பெருமணலை கடந்து செல்கையில் பஞ்சலில் ஒரு புதுமை செய்ததாக கூறப்படுகிறது. தொழு நோயாளி ஒருவரை சவேரியார் எதிர் கொள்கிறார். அவர் உடனடியாக ஒரு தம்ளரில் தண்ணீர் எடுத்து தொழுநோயாளியினுடைய கண்களை கழுவி தண்ணீரை குடித்தார் மீதியை சிறிய குழி ஒன்றில் ஊற்றினார். தொழு நோயாளி உற்சாகம் பெற்றான். அந்த சிறிய குழி தண்ணீர் இன்றும் பஞ்சலில் விளங்கி சவேரியார் கிணற்று தண்ணீர் என்றே அழைக்கப்படுகிறது. ஆயினும் பெருமணலில் மனமாற்றத்தை ஏற்படுத்திய சவேரியார் பஞ்சலில் ஏன் ஏற்படுத்தவில்லை என்ற ஒரு கேள்வி எழுகிறது. பஞ்சல் ஊர் மற்ற கடற்கரை கிராமங்களை விட சற்று உள்ளே அமைந்துள்ளது. எனவே சவேரியார் அவ்வுரின் உள்ளே செல்லாமல் பெருமணல் ஊரைக் கடந்து கூத்தன்குழி கடலோரத்தில் ‘சவேரியார் மடம்;’ என்று அழைக்கப்படும் இடத்திற்கு சென்றுள்ளார் என்று அறியப்படுகிறது. அதன் பிறகு சவேரியார் பெருமணலில் தங்கி அங்கு உள்ளவர்களை மனம் மாற்றியுள்ளார் என்றும் அவர் பஞ்சல் ஊருக்கு செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. சவேரியார் வருகைக்கு பின்னர் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் போர்த்துகீசியரின் வருகை மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியது. இதில் ஒன்று பஞ்சலில் அவர்கள் கட்டிய முதல் குடிசை கோவில். இக்கோவில் கி.பி 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின்னர் ஏற்பட்ட பிரெஞ்சு ஆட்சி மேலும் பல விளைவுகளை ஏற்படுத்தியது. பின்னர் 1936 ஆல் ஏற்பட்ட இரட்டை ஆட்சி முறை அதாவது கோவா மறைமாவட்டத்திற்கும் கொம்புத்துறை மறை மாவட்டத்திற்கும் எல்லையாக அமைந்தது பஞ்சல, பெருமணல் கிராமங்கள். இவ்விரட்டை ஆட்சி முறையினால் இக்கிராமங்கள் சில காலம் கோவா மறைமாவட்டத்திற்கும் சில காலம் கொம்புத்துறை மாவட்டத்திற்கும் உட்பட்டிருந்தது. பின்னர் கோவா மறை மாவட்ட ஆட்சிக்கு உட்பட்டது அப்போது கோவா மறைமாவட்டத்தில் இருந்து இயேசு சபை குருக்கள் பஞ்சல் கிராமத்திற்கு சென்று அங்கு வாழ்ந்த மக்களுக்கு திருமுழுக்கு வழங்கி கிறிஸ்தவ மக்களாய் மாற்றினார்.

panjal new churchபெருமணல், இடிந்தகரை ஆகிய ஊர்களிலிருந்து பலர் பஞ்சலில் குடியேறினார்கள். ஆனால் பொருளாதார மேம்பாட்டிற்கும் சமூக வாழ்வுக்கும் அவ்விடம் ஏதுவாய் இல்லாததும் மேலும் அரசாங்கம் அவர்களுக்கு நிலையான பட்டா வழங்காததும் மற்றும் அதிக வரி விதித்ததன் காரணமாக சில ஆண்டுகளிலேயே பஞ்சல் ஊரை விட்டுவிட்டு மீண்டும் பெருமணல, இடிந்தகரை ஊர்களுக்கு திரும்பினர். இவ்வாறு பஞ்சலில் இருந்த மற்ற ஊர்களுக்கு சென்று குடியேறினவர்களை பஞ்சலான் பேரன் என்று அழைக்கிறார்கள் இவர்களில் இருவர் தூத்துக்குடி மறைமாவட்டத்தின் ஆயர்களாக திருநிலைபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதில் ஒருவர் மறைந்த மேதகு தாமஸ் ஆண்டகை அவர்கள் பஞ்சலான் பேத்தியின் மகன், மற்றவர் மேதகு ஆயர் பீற்றர் பர்னாந்து அவர்கள் பஞ்சலான் பேரனின் மகன்.

கி.பி 1715-ல் கட்டப்பட்ட இவ்வாலயம் மூன்று முறை சில மாற்றங்களுடன் திருத்தி அமைக்கப்பட்டு தற்போது முழுவதுமாக இடித்து முன்னால் பங்குதந்தை அருட்பணி ஜெயஜோதி மற்றும் இன்னாள் பங்குதந்தை அருட்பணி கிஷோக் அவர்களின் முயற்சியினாலும் பக்தர்களின் தாராள உதவியினாலும் புதிய திருத்தலமாக எழுப்பப்பட்ட இவ்வாலயம் 2014 ஆகஸ்டு மாதம் 2-ம் நாளன்று தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு இவோன் அம்புரோஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது

panjal-church-functionதூய லொயோலா இஞ்ஞாசியார் பலவித இன்னல்களினாலும் மனக் கவலையினாலும் குழப்பங்களினாலும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசி அவர்களின் தேவைகளை புர்த்தி செய்பவராக விளங்குகிறார். இப்புனிதரின் பெருவிழா ஆண்டுதோறும் ஜீலை மாதம் இறுதியில் அல்லது ஆகஸ்டு மாதம் தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. அவ்வேளையில் அவருடைய திருப்பண்டம் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இதனால் மக்கள் பக்தியோடும் மிகுந்த விசுவாசத்தோடும் தரிசிக்கிறார்கள்.

எல்லோருக்கும் பாதுகாவலராய் விளங்கும் தூய இஞ்ஞாசியாரின் பாசமுள்ள பிள்ளைகளாய் வாழ்வோம் அவரைப்போல் இயேசுவுக்கு சாட்சிகளாய் திகழ்வோம்!

by Maria Rose Shilpa